ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புமீது தேசத்துரோக வழக்கு
தொல்.திருமாவளவன் கண்டனம்

~~~~~~~~

உலகப் புகழ்பெற்ற மனிதௌரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்த்வர் சிலரை அழைத்துவந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எடுத்துரைக்கச் சொல்லியுள்ளனர். சட்டவிரோதமாக ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஹாத் அஹமத் கான் என்பவரின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்துபேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து முறைப்படி காவல்துறையினருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த சிலர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பெங்களூரு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்துத்துவ அமைப்பு ஒன்றின் நெருக்குதலுக்கு கர்னாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பணிந்துபோவதும், தயக்கமில்லாமல் வழக்கு போடுவதும் வியப்பளிக்கின்றன. இந்த நிகழ்வில் சட்டவிரோதமான எந்தவொரு பேச்சும் இடம்பெறாத நிலையில் இப்படி வழக்குபதிவு செய்திருப்பது கருத்துரிமை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது.

இந்தியாவெங்கும் பல்கலைக்கழக வளாகங்களை காவிமயமாக்குவதோடு கல்விச்சூழலையும் சீரழித்துவருகின்ற ஏபிவிபி அமைப்பு இப்போது மனித உரிமை அமைப்புகளைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கிரீன்பீஸ் அமைப்புக்குக் கடுமையான நெருக்கடி தரப்பட்டது. இப்போது ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பைக் குறிவைத்துள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தனது சுதந்திரதின உரையில் ' சகிப்புத்தன்மையற்ற பிரிவினைவாத சக்திகள் தமது கோரமுகங்களை உயர்த்த முயற்சிக்கின்றன ' என எச்சரித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும்விதமாகவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின்மீதான தாக்குதல் நடந்துள்ளது. அந்த அமைப்பின்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக