மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு - தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு

17-08-2016

தீர்மானம்



ஆகஸ்டு 17 - எழுச்சித்தமிழர் பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாளையொட்டி 17-8-2016 அன்று சென்னை, இராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்த மதச் சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.  தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


உலகெங்கும் வலதுசாரி சக்திகளின் கை ஓங்கியுள்ள காலத்தில், இந்தியாவில் ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் பாரதிய சனதா கட்சி இந்த சமூகத்தின் அனைத்துப் பகுதிகளையும் காவிமயமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சூழலில் இந்திய சனநாயகத்தைக் கொடுங்கோன்மை இருள் சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது.


பா.ச.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வி நிறுவனங்களையும் ஆராய்ச்சி மையங்களையும் தனது பிடிக்குள் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறது. 


துணைவேந்தர் நியமனங்களிலும் தன்னாட்சி அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளிலும் வரலாற்று ஆராய்ச்சி மையங்களிலும் இந்துத்துவ சார்பாளர்களே பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர்.


எழுத்தாளர்கள், கலைஞர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.  பேராசிரியர் கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.  அந்தப் படுகொலைகளில் ஒரு மதவாத அமைப்பே ஈடுபட்டது என்பது காவல்துறையால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.


சிந்தனையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தமக்கு வழங்கப்பட்ட விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து போராட்டங்களை நடத்தினர்.


இந்திய இலக்கியம், பண்பாடு ஆகியவை குறித்து மதிக்கத்தக்க ஆய்வுகளை வழங்கியுள்ள அயல்நாட்டு அறிஞர்களின் நூல்களும்கூட தடை செய்யப்பட்டன.  அவர்களும் இந்துத்துவ இயக்கங்களால் அச்சுறுத்தப்பட்டனர்.


2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று பா.ச.க. ஆட்சி அமைத்தது முதற்கொண்டு அதன் தாக்குதல் தீவிரமாகியுள்ளது.  இந்தத் தேர்தலில் பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, இராமர் கோவில் பிரச்சனை முதலானவற்றை வெளிப்படையாக முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதால் மக்கள் தமக்கு அளித்த ஆதரவை பிரச்சனைக்குரிய இந்த மூன்று நோக்கங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலாக அது கருதி வருகிறது.  இதனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாள் கனவான இந்து ராச்சியத்தை இங்கே உருவாக்குவதற்கு அது முனைகிறது.


1990களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்ததுபோல அல்லாமல், எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகளின் ஆதரவைத் திரட்டுவதற்கு அது இப்போது பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது.  மத அடிப்படைவாதமும், சாதி அடிப்படைவாதமும் ஒருங்கிணைந்து உருவெடுத்திருப்பதுதான் இன்றைய இந்துத்துவம்.  அதன் இலக்கு மதச் சிறுபான்மையினர் மட்டுமல்ல தலித் மக்களும்தான்.


பா.ச.க. ஆட்சி அமைந்ததிலிருந்து நாடு முழுவதும் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.  அவர்கள் மீதான வன்கொடுமைகளின் எண்ணிக்கையிலும் தன்மையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  பசு பாதுகாப்பு என்ற பெயரில் இசுலாமியர்கள்தான் முன்னர் தாக்கப்பட்டனர்.  இப்போதோ தலித்துகளும் அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுகின்றனர்.  தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்முறையை மதம் என்கின்ற பெயரால் அவர்கள் நிகழ்த்துகின்றனர்.


இந்த மதவாத, சாதியவாத கூட்டணியை சரியாக அடையாளம் காண வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.  மதவெறியை மட்டும் எதிர்த்துக்கொண்டு சாதிவெறியைக் கண்டும் காணாமல் இருப்பவர்களை மதச்சார்பற்றவர்கள் என நாம் ஏற்க முடியாது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகள், மதவெறி, சாதிவெறி இணைந்த இந்துத்துவத்தை எதிர்த்து ஓரணியில் திரளுவது இன்றியமையாததாகும்.


இதற்காகத்தான் திருச்சியில் ஜூலை 16, 2016 அன்று கூடிய எமது மாநிலச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:


“மத்தியில் ஆளும் பாஜக அரசு புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக உள்ள மதச்சார்பின்மைத் தத்துவத்தை அழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மதச் சிறுபான்மையினருக்கு எதிராகவும் தலித் மக்களுக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மேற்கொண்டு வரும் வெறுப்புப் பிரச்சாரத்தை ஊக்குவித்து, கட்டமைப்புரீதியான வன்முறையை அதிகரிப்பதற்கு ஆதரவளித்து வருகிறது. பட்ஜெட்டில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தும், ஷிசிஷிறி/ ஜிஷிறி 


முதலான திட்டங்களை ரத்துசெய்தும் மிகப்பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது; சட்டத்துக்குப் புறம்பான வழிமுறைகளைக் கையாண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க முயற்சிக்கிறது. 


இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை அழிக்க முற்படும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்காததோடு அந்த அரசுக்கு மக்களவையிலும் மாநிலங்களவை யிலும் ஆதரவளிப்பதன் மூலம் தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவானது பாஜகவின் கூட்டாளியாகச் செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல இந்துத்துவ சக்திகள் வலுப்பெற ஊக்கமளிக்கிறது. 


இந்நிலையில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் வழியில் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இம்மாநிலச் செயற்குழு உணர்கிறது. அத்தகையதொரு பரந்த அணி சேர்க்கையை உருவாக்குவதற்கான உத்திகளை வகுத்துச் செயல்படுத்திட இம்மாநிலச் செயற்குழு உறுதியேற்கிறது.”


இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்துதான் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று கூட்டப்பட்டுள்ளது.


2014ஆம் ஆண்டைவிட 2015ஆம் ஆண்டில் மதவாத வன்முறைகளின் எண்ணிக்கை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.  பா.ச.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மதவாத வன்முறைகள் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன. தலித்துகள் மீதான வன்கொடுமைகளும் மேற்குறிப்பிட்ட பா.ஜ.க. ஆளும் மூன்று மாநிலங்களில் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.


பா.ஜ.க. ஆட்சியில் எழுச்சி பெற்றுள்ள வகுப்புவாதம் என்பது மதச்சிறுபான்மை யினர்களை மட்டுமின்றி தலித்துகளையும் எதிரிகளாகவே கட்டமைக்கிறது என்ற உண்மையைத்தான் இந்தப் புள்ளி விவரங்களும் தற்போது குஜராத் மாநிலம் உனா என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுகளும் காட்டுகின்றன.


இந்துத்துவத்தின் பொருளாதார அணுகுமுறை என்பது பெரும்பான்மை மக்களை ஓட்டாண்டிகளாக்கி ஒரு சிலரது கைகளில் மட்டும் நாட்டின் வளங்களையெல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கிற, தாராளவாத தனியார்மயக் கொள்கையாக இருக்கிறது.  உலகமயமாதல் என்ற பெயரில் இன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கு அது அனுசரணையாக இருக்கிறது.  பா.ச.க.வின் அரசியல் கொள்கையோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ள உரிமைகளைப் பறிப்பதாகவும், பாராளுமன்ற சனநாயக முறையை நீர்த்துப் போகச் செய்து அதிபர் ஆட்சிமுறையை அமைப்பதாகவும், மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் ஒரு சர்வாதிகார அரசை நிறுவுவதாகவும் உள்ளது.  அதன் பண்பாட்டு அணுகுமுறை ஒரே தேசம், ஒரே பண்பாடு என்பதாக இந்திய நாட்டில் நிலவிவரும் பன்மைத்துவத்தை அழிப்பதாக, பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை ஆணாதிக்கச் சிறைக்குள் முடக்குவதாகவும், மதச் சிறுபான்மையினரை அந்நியர்களாகவும், தேச விரோதிகளாகவும் கட்டமைப்பதாகவும், தலித் மக்களை வர்ணாசிரமத்தின்கீழ் நிரந்தர அடிமைகளாக மாற்றுவதாகவும் உள்ளது.


இந்தியாவில் வலுப்பெற்றுவரும் இந்துத்துவம் என்ற மதவாத, சாதியவாத கூட்டணியை முறியடிப்பதன் மூலமே இந்திய சனநாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட மதச் சார்பின்மையை நாம் காப்பாற்ற முடியும். 


மதச் சார்பின்மையைப் பாதுகாப்பதென்பது மதமும் சாதியும் ஒருங்கிணைந்த கூட்டணியை எதிர்த்து முறியடிப்பதுதான். அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற சனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம்.


இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக