தேர்தல் வெற்றிக்காக என்னைக் கொல்லவும் துணிவார்கள் - திருமாவளவன்

2015 ஆகஸ்ட் 17-ம் நாள், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா நடந்தது. அந்தப் பிறந்தநாள் விழாவில் பிறந்தது, ‘மாற்று அரசியல்... கூட்டணி ஆட்சி’ என்ற கோஷம். அதன் நீட்சியே, ‘மக்கள் நலக்கூட்டு இயக்கம்’. அந்த நீட்சியின் தொடர்ச்சிதான், ‘மக்கள் நலக் கூட்டணி’. 2016 சட்டமன்றத் தேர்தலில், பழைய கணக்குகளைப் பொய்யாக்கி, சில புதிய கனவுகளை நிஜமாக்கியது.

அதுபோல, 2016 ஆகஸ்ட் 17-ம் நாள், திருமாவளவனின் 54-வது பிறந்தநாள் விழா, சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. தனிநபர் துதிபாடும் விழாவாக இல்லாமல், ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து நடைபெற்றது. இந்த விழாவும், எதிர்வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அரசியல் அதிர்வுகளை உருவாக்கும் என்ற தோற்றத்தை உண்டாக்கிச் சென்றுள்ளது.


83 கிலோ எடையுள்ள திருமாவுக்கு 93 கிலோ நாணயம்!
விடுதலைச் சிறுத்தைகளின், ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’, இரவு 7 மணிக்குத் தொடங்கியது. பொதுவுடைமைக் கட்சி மேடைகளில் மட்டும் முழங்கிவந்த கவிஞர் இன்குலாப், முதன்முதலாக மாற்றுக் கட்சி மேடையில் நடைபெற்ற கவியரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, வரவேற்புக் கவிதை வாசித்தார். கவிஞர்கள் கனல் மைந்தன், இளவேனில், ரசாக், தணிகைச்செல்வன் ஆகியோர் திருமாவளவனைப் புகழ்ந்து கவிதை படித்தனர். கவிதைகள் வாசிக்கப்படும்போது, திருமாவளவனின் முகம் பூரிப்பு அடைந்தது. பெரம்பலூர் கிட்டு என்பவர், கட்சி நிதிக்காக திருமாவளவனின் எடைக்கு எடை, அம்பேத்கர் உருவம் பொறித்த 10 ரூபாய் நாணயங்களை வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்ட திருமாவளவன், “என்னுடைய எடை 83 கிலோதான். ஆனால், பெரம்பலூர் கிட்டு வழங்கிய நாணயங்களின் எடை 93 கிலோ 600 கிராம். கட்சி நிதிக்காக என் எடையைவிடக் கூடுதலாகவே கொடுத்துள்ளார்’’ என்று பாராட்டினார்.

‘‘திருமா பிறந்தநாள்... திருமண நாளாக இருக்க வேண்டும்!’’
கவியரங்கத்துக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மேடைக்கு வந்தனர். ஒவ்வொருவர் பேச்சிலும், மக்கள் நலக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் கண்ட தோல்விக்கான விளக்கம் இருந்தது. அதே நேரத்தில், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும் என்ற ஆவலும் தெரிந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசியபோது, ‘‘திருமாவளவனின் பிறந்தநாள் விழாவை, மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடாக நடத்துகிறீர்கள். ஆனால், இங்கு முன்வரிசையில் அமர்ந்துள்ள, திருமாவளவனின் தாயாரும் சகோதரியும், இது திருமாவின் பிறந்தநாளாக இல்லாமல், ஒரு திருமண நாளாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்,  செத்த மாடுகளைவைத்து, உயிருள்ள மனிதர்களைக் கொல்லும் அரசியலைச் செய்கின்றனர்; வாயில்லாத பசுக்களைக் காரணம் காட்டி, முஸ்லிம்களைக் கொல்கின்றனர்; தலித்களைத் தாக்குகின்றனர். அந்த மதவாத சனாதனக் கும்பல், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்கிறது; முஸ்லிம் இல்லாத இந்தியா என்கிறது. அவர்கள் கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை... விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை... ம.தி.மு.க இல்லாத இந்தியா என்று சொல்லவில்லை என்று நாம் சும்மா இருக்க முடியாது. ஏனென்றால், அவர்களை முடித்துவிட்டுப் பிறகு நம் பக்கம் வருவார்கள். அதனால், அவர்கள் மற்றவர்களைக் குறிவைக்கும்போதே நாம் குரல் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், அவர்கள் நம்மைத் தாக்க வரும்போது, நமக்காகக் குரல் கொடுக்க யாரும் வரமாட்டார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் செய்து தோற்றுப்போன மோசமான வெறுப்பு அரசியலை இப்போது பி.ஜே.பி செய்கிறது. நாம் அதை அனுமதிக்கக் கூடாது. ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். வெற்றி - தோல்வி சகஜம். மக்கள் நலக் கூட்டணி, சட்டசபைத் தேர்தலில் தோற்றுவிட்டது. அதனால், ‘உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி நீடிக்குமா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு, ‘நான் நீடிக்கும்’ என்று சொன்னேன். ‘இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் நீடித்தால், வெற்றி பெறுமா?’ என்று அடுத்த கேள்வி கேட்கிறார்கள்... அவர்களுக்கு என்ன சொல்வது? மக்கள் ஓட்டு போட்டால் வெற்றி பெறும்... இல்லையென்றால், தோற்றுப்போகும். ஆனால், எங்கள் கூட்டணியும், சாதிய மதவாத சக்திகளை எதிர்த்து நாங்கள் நடத்தும் போராட்டங்களும் தொடரும். உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டணியும் தொடரும்” என்றார்.

‘‘பெரியாரின் வாரிசுகள் ஆணவக் கொலையைக் கண்டிக்கவில்லை!’’
ஜி.ராமகிருஷ்ணன் பேசியபோது, “இந்திய விடுதலைப் போராட்டத்தில் சாதி - மத வேறுபாடு இன்றி அனைவரும் கலந்துகொண்டனர். தங்களின் உயிரைக் கொடுத்தனர். ஆனால், அந்தத் தியாகத்தில் ஈடுபட்ட உழைப்பாளி மக்களுக்குச் சுதந்திரத்தின் பலன் முழுமையாகக் கிடைக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாததோடு, அந்தப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான், இன்று இந்தியாவை ஆள்கின்றனர். அவர்கள், இந்திய அரசியல் சாசனத்தின் உள்ளடக்கத்தையே மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழகத்திலும் சிலர் தலித் மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை செய்கின்றனர். அதையே தங்களின் முழுநேர அரசியலாகச் செய்கின்றனர். அதனால்தான், சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லும், ஆளும் கட்சி - எதிர்க் கட்சி ஆகிய இரண்டு கட்சியினர், ‘ஆணவக் கொலை’ என்ற வார்த்தையையே உச்சரிக்க மறுக்கின்றனர். அதனால்தான், சிலர் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, ‘வெறுப்பு அரசியல்’ செய்வதையே தங்களின் முழுநேரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். அப்படிச் செய்வதன் மூலம், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடையே பகையை உருவாக்கி, அதைத் தங்களுக்கு அரசியல் ஆதாயமாக்க முனைகின்றனர். அந்த முயற்சி தொடர்ந்தால், அதை நாங்கள் ஒன்றுபட்டு முறியடிப்போம். இந்தக் கூட்டணியில், அம்பேத்கரியத்தைக் கொள்கை கோட்பாடாகக் கொண்ட திருமாவளவன் இருக்கிறார்; மார்க்சியக் கொள்கையை ஏற்றுக்கொண்ட இடதுசாரிகளாகிய நாங்கள் இடம்பெற்றுள்ளோம்; பெரியாரின் பாசறையில் இருந்துவந்த வைகோ இருக்கிறார். ஆக, இதுதான் மதவாத - ஆதிக்க சாதி உணர்வுகளுக்கு எதிரான உண்மையான கூட்டணி. ஒரு தேர்தல் தோல்வியால், நாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்தக் கூட்டணி முறிந்துவிடக் கூடாது” என்று பேசினார்.

‘‘தே.மு.தி.க சேர்ந்ததால் மக்கள் நலக் கூட்டணி இருட்டடிப்பு செய்யப்பட்டது!’’
வைகோ தன்னுடைய பேச்சில், “திருமாவளவன் தன்னலம் கருதாத தலைவர்; ஓய்வறியா உழைப்பாளி. அவர் மட்டும் கொஞ்சம் சுயநலம் பார்த்திருந்தால், காட்டுமன்னார் கோயிலில் வெற்றி பெற்றிருப்பார். கடைசி நாள் மட்டும் அவர் தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் செய்திருந்தால், அவருக்கு அந்த வெற்றி வாய்த்திருக்கும். சட்டசபையில், அவர் குரல் ஒலித்திருக்கும். ஆனால், தே.மு.தி.க தலைவர் (பெயரைச் சொல்லவில்லை) தன்னுடைய தொகுதியில், திருமாவளவன் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அங்கு போய் பிரசாரம் செய்தார். இப்படிப்பட்ட சுயநலம் இல்லாத ஒரு தலைவரை இதுநாள் வரை நான் கண்டதில்லை. திருமாவளவன் முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, நாங்கள் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினோம். தமிழக அரசியல் அரங்கில் பல அதிர்வுகளை அந்தக் கூட்டணி உருவாக்கியது. ஆனால், தே.மு.தி.க-வும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் எங்கள் கூட்டணியில் இணைந்த பிறகு, நாங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டோம்; ஏகடியத்துக்கு ஆளானோம். அதன் விளைவு, மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியால் நாங்கள் துவண்டுவிடவில்லை. ஏனென்றால், போராளிகள் நாங்கள். யுத்தத்தைத்தான் இழந்திருக்கிறோம்; களத்தை இழக்கவில்லை. இன்னும் பல களங்கள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் வருகிறது... அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில், நாங்கள் வெல்வோம்” என்றார்.

‘‘மக்கள் நலக் கூட்டணி என்றும் தொடரும்!’’

“இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு. ஏனென்றால், ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், அரசியல் அரங்கில் மாபெரும் விவாதத்தைக் கிளப்புகிற மாநாடாக உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை, மேற்கோளாகப் பதிவு செய்துள்ளோம். வெறும் ஓட்டு, பதவி, அதிகாரம், சுகம் என்று நினைக்கிற கும்பலுக்கு மத்தியில், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தேசத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப்படுகிற விதத்தில் இந்த மாநாட்டை ஏற்படுத்தி உள்ளோம். இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பூதம் திடீரென்று மோடியின் வடிவில் வந்துவிடவில்லை. நீண்டகாலமாக அது, இங்கு இருந்துவருகிறது. அந்த அச்சுறுத்தலில் இருந்து தேசத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அன்றே செயல்பட்டவர் அம்பேத்கர். அம்பேத்கரையும் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரையும் கொள்கை ஆசான்களாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதுதான் பலரின் கண்களை உறுத்துகின்றன; நெஞ்சைப் பதறவைக்கிறது; அடிவயிறை எரிச்சலடைய வைக்கிறது. அதனால், திருமாவளவனைக் குறிவைத்து மிகக் கேவலமான அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் செயல், கொலைவெறியைத் தூண்டுகிற முயற்சி. அபாண்டமான பழி. ஆதாரமில்லாத அவதூறு. அப்பட்டமான பொய். ஆனால், அதை அந்தக் கும்பல் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகிறது. நாட்டைப் பற்றி, மக்களைப் பற்றி, மதவெறி அரசியலைப் பற்றிப் பேசாமல், நம்மைப் பற்றி அவதூறுகள் பேசுகின்றனர் அந்த அற்பர்கள். பொய் பேசுகிறவர்களுக்கு உலகத்தில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அதைத் தைலாபுரத்தில் இருக்கிற, அந்தப் பொய் சொல்லிக் கும்பலுக்குத்தான் கொடுக்க வேண்டும். அண்டப்புளுகு... ஆகாசப் புளுகு புளுகுகிறார். மனச்சாட்சி இல்லாமல், பொய் சொல்கிறார். பொண்டாட்டி நம்மைக் கேவலமாக நினைப்பாளே என்ற எண்ணமின்றி... அவருடைய பிள்ளைகள், இப்படிப்பட்ட பொய் சொல்கிறவரா நம் தந்தை என்று நினைப்பார்களே என்ற வெட்கமில்லாமல், மனச்சாட்சி இல்லாமல் பொய் சொல்கிறார். அவர்களுடைய அருவருப்பான அரசியலை நாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று நாம் ஒதுங்கிச் சென்றுகொண்டே இருக்க... அவர்கள் பொய்ப் பிரசாரத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர். அதிகாரம், பரிசு, பதவி முக்கியம் என்று நான் கருதி இருந்தால், நான் எடுத்த முடிவு சட்டசபைத் தேர்தல் நேரத்தில் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

தோல்வியைப் பற்றிக் கவலையில்லை. நாம் எடுத்துவைத்திருக்கிற மாற்று அரசியல்தான் முக்கியம் என்று உறுதிப்பாட்டோடு இருக்கிறோம். நம் கொள்கைக் கற்பை எவராலும் கலங்கப்படுத்திவிட முடியாது. கட்சிக்குள் முன்னணிப் பொறுப்பாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் யார்? ஒட்டுமொத்தத் தமிழகமே ஈழத்தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, மரக்காணத்தில் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, ஈழத்தமிழர் போராட்டத்தைத் திசை திருப்பியவர்கள் அவர்கள். ஒட்டுமொத்த தமிழகமே, தி.மு.க - அ.தி.மு.க உள்பட ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, தர்மபுரியில் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி, தமிழகத்தின் அரசியல் திசைவழியைத் திருப்பியவர்கள் அவர்கள். எவ்வளவு கேடான அரசியல்... எவ்வளவு தற்குறித்தனமான அரசியல்... எவ்வளவு சுயநலமான அரசியல்... எவ்வளவு அருவெருப்பான அரசியல்? அதைக் கண்டிக்காதவர்கள் இன்று விடுதலைச் சிறுத்தைக்கு அறிவுரை கூறக் கிளம்பி உள்ளனர்.

மானம் கெட்டுப் பல்லை இளித்து, காலை நக்கிப் பிழைக்கிறவன் அல்ல திருமாவளவன்... பதவிக்காகச் சுயமரியாதையை அடகுவைப்பவன் அல்ல திருமாவளவன். கோகுல்ராஜ் கழுத்தை அறுத்து, தலையைத் துண்டித்து, தண்டவாளத்தில் அவரைத் தூக்கி எறிந்த கொடூரம் சாதாரணமான கொடூரமா... அதற்கு இங்கே யார் பதறினார்கள்? அவர் யார் என்பது நமக்குத் தெரியாது. அவர் என்ன காதல் விவகாரத்தில் ஈடுபட்டார் என்பதற்கு இங்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கு என்ன பதற்றம் ஏற்பட்டது? அவர் உடலை அடக்கம் செய்தபோது ஏற்பட்ட ஆற்றாமையில் நான் பேசினேன்... இயலாமையில் பேசினேன். அந்தக் கொடுமையைக் கண்டு நான் பேசினேன். இவர்களுக்கு எல்லாம் தெரிந்தது பொம்பளை சமாசாரம்தான். அதைத் தாண்டிய அரசியல் இவர்களுக்குத் தெரியாது என்று பேசினேன். அப்போது தோழர் ரவிக்குமார் சொன்னார், ‘உங்கள் ஸ்டேட்டஸுக்கு நீங்கள் இப்படிப் பேசக் கூடாது. உங்களை மாற்றுச் சமூகத்தவர்கள் மதிக்கிறார்கள். அந்தப் பெருமை உங்களுக்கு இருக்கிறது. அந்தப் பெருமையால்தான் நானும் உங்களோடு இருக்கிறேன்’ என்றார். அப்படிப்பட்டவர்கள்தான் என்னோடு இருக்கிறார்கள். அப்படியில்லாமல், ஜீன்ஸ் பேன்ட்டும் கூலிங் கிளாஸும் போட்டுக்கொண்டு போய் மாற்றுச் சமூகப் பெண்களை, காதலி என்று நான் சொல்லிக்கொண்டு இருந்தால், ரவிக்குமார் என்னைத் தலைவராக ஏற்றுக்கொள்வாரா? சிந்தனைச்செல்வன் என்னைத் தலைவராக ஏற்பாரா? அதையெல்லாம் தாண்டி, என் தாயும் தந்தையும் அப்படிப்பட்ட ஓர் அற்பனாக வளர்க்கவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளைச் சொல்லிக் கொடுத்து, அடுத்தவர் வருந்தும் செயலை நீ செய்யக் கூடாது என்று சொல்லித்தான் என்னை வளர்த்தனர். அன்றைக்கு நான் பேசியது, ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்களை மனதில் வைத்துத்தான் பேசினேன். அதற்காக நான் வருத்தப்பட்டேன். அதை ஏன் இன்று நான் சொல்கிறேன் என்றால், அரும்பாடுபட்டுக் கட்சியை வளர்த்து, வைகோ போன்றவர்களெல்லாம் இடதுசாரித் தலைவர்கள் எல்லாம் இங்கு நீண்டநேரம் காத்திருந்து நம்மை ஊக்கப்படுத்தும் எல்லையைத் தொட்டிருக்கிறோம். ஆனால், சிலர் மாற்றுச் சமூகங்களை எல்லாம் நமக்கு எதிராகத் திருப்பி, என் ரத்தத்தில் சோறு பிசைய நினைக்கிறார்கள். என்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், இரண்டு சமூகங்களுக்கு இடையில் மிகப்பெரிய மோதலை உருவாக்க நினைப்பதை நினைத்துக் கவலைப்படுகிறேன்.

சாதியவாதமும் மதவாதமும் வேறல்ல. மதவாதம், என்பது ராணுவம் என்றால், அதில் ஒவ்வொரு சாதியும் ஒரு பட்டாலியன். சாதியம் கீழ்த்தளத்தில் வேலை பார்த்து, இந்து என்ற இந்துத்துவ கோட்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது... மதம் என்பதைப் பாதுகாக்கும். சாதியவாதம் மதவாதத்தின் அடித்தளம். சாதியவாதம் மதவாதத்தின் உயிர் மூச்சு. எனவே, மதவாதம் என்பதை பார்பனியம் என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. இந்த நிலையில்தான், மோடி வாய் திறக்கிறார். அவர் ஏன் வாய் திறந்தார் என்று நமக்குத் தெரியாதா? எந்தப் பிண்ணனியில் சொல்கிறார் என்று நமக்குத் தெரியாதா? தருண் விஜய் யார் என்று நமக்குத் தெரியாதா? தலித்களைக் குறிவைத்துத் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ராமதாஸ், தலித் வெறுப்பு அரசியலை உயர்த்திப் பிடிக்கிற நேரத்தில், ‘தலித்களைத் தாக்காதீர்கள்’ என்று ஒரு குரல் நாட்டின் பிரதமர் மோடியின் வாயில் இருந்து வருவது - அது உண்மை அல்ல; அது நீலிக்கண்ணீர் என்பது வேறு - வரும்போது, நாம் அதைக் கருவியாக எடுத்துக்கொள்கிறோம். இந்தச் சாதி வெறியர்களுக்கு ஒரு சவுக்கடிபோல, நாம் அதை ஓர் ஆயுதமாக ஏந்திக்கொள்கிறோம். அவர்களுக்கு ஒரு சவுக்கடி கொடுப்பதற்கான வாய்ப்பு அது. ராமதாஸை இயக்குகிறவர்களே, சங்பரிவார்தான். அதனால்தான், திருமாவளவன், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடத்தும்போது, பேசி வைத்துக்கொண்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில், ராமதாஸ் பேட்டி கொடுத்தார். அவன் யாரை எதிர்ப்பான்... அதில், கலந்துகொள்கிறவர்கள் யார்? இவர்கள் கட்டாயம் சங்பரிவார் கும்பலை எதிர்த்துத்தான் பேசுவார்கள் என்று அவர்கள் பேசி வைத்துக்கொண்டு, அவர்கள் அந்தப் பேட்டியைத் திட்டமிட்டனர். மதவாத அரசியலைக் கையில் எடுப்பதுதான் நமக்குச் சிக்கல். ஒருவேளை, கூலிப்படைவைத்து என்னை ஒழித்துக்கட்டலாம். அவர்கள், அப்படிச் செய்வார்கள்... யோசிப்பார்கள். ஏனென்றால், அப்படிச் செய்தால், தலித்கள் ஆத்திரப்படுவார்கள். அப்படி நடந்தால், தலித் - தலித் அல்லாதவர்கள் என்று பிரிந்து ஒரு யுத்தம் மூளும். அப்படி யுத்தம் மூண்டால், அதில் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் திட்டம். அதனால்தான் நான் சொல்கிறேன்... சமூக வலைதளங்களில் நம்மை ஆத்திரமூட்டினால், நாம் அவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. அவர்களை நாம் ‘பிளாக்’ செய்தால் போதும். நாம் தரம் தாழ்ந்து பேசக் கூடாது... என்னால் முடியாது. அவர் பேசுகிற அளவுக்கு தரம் தாழ்ந்துபோய்ப் பேச முடியாது. அதனால், என்னைப் பின்பற்றும் நீங்களும் தரம் தாழ்ந்துபோகக் கூடாது. நாம் விவாதிக்கப் பல அவைகள் இருக்கின்றன. அங்கு நாம் விவாதித்துக்கொள்ளலாம். நம்மை மற்றவர்கள் தூண்டுவார்கள். ஏனென்றால், உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இது பெரியாரின் மண்... இங்கு மதவெறிக்கு இடமில்லை. இது சிறுத்தைகளின் மண்... இங்கு சாதிவெறிக்கு இடமில்லை. சாதியவாதிகளும் மதவாதிகளும் வேறு வேறானவர்கள் அல்ல... சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் வகுப்புவாதத்துக்கு ஆதரவானவர்கள் என்று என்றாவது சொல்ல முடியுமா? சாதியவாதத்தை உள்ளடக்கியதுதான் மதவாதம். பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்கிற வன்முறைத் தாக்குதல்களால், வட மாநிலங்களில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றிணையும் போக்கு உருவாகிவிட்டது. அதற்குத்தான் மோடி பயப்படுகிறார். அதனால்தான், திடீர் ஞானோதயம் வந்துள்ளது. மதவாத சக்திகள், முஸ்லிம் - கிறிஸ்தவர்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல்... சாதியவாதச் சக்திகள், தலித் மக்களுக்கான எதிரான வெறுப்பு அரசியல் என்ற இந்த இரண்டை மட்டும் மையப்படுத்தி, அரசியலைச் சந்திக்கிற ஒரு தற்குறித்தனத்தை இங்கு நாம் பார்க்கிறோம். இதில் இருந்து இந்தத் தேசத்தைக் காக்க, நாம் இடதுசாரிகளோடு என்றும் கைகோர்த்து நிற்போம். இதில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அண்ணன் வைகோவோடும் என்றும் கைகோர்த்து நிற்போம்’’ என்று பேசினார்.

தே.மு.தி.க - த.மா.கா இல்லாத மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்வதை உறுதி செய்துள்ளது திருமாவளவனின் 54-வது பிறந்தநாள் விழா.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: மீ.நிவேதன்
வீடியோ: வீ.நாகமணி


நன்றி : விகடன்
Posted Date : 19:43 (18/08/2016)

0 comments:

கருத்துரையிடுக