ஈழத்தில் காணாமல் போன 25,000 தமிழர்கள் பற்றி அனைத்துலக விசாரணை தேவை

ஈழத்தில் காணாமல் போன 
25,000 தமிழர்கள் பற்றி அனைத்துலக விசாரணை தேவை

தொல்.திருமாவளவன் வேண்டுகோள்
 
 

  ஆகஸ்டு 30ஆம் நாள் அனைத்துலக காணாமல் போனோர் நாளாக ஐ.நா.பேரவையால் அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டாக உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் போர் மற்றும் உள்நாட்டுப்போர் ஆகியவற்றால் போர் நடக்கும் தேசங்களில் பல்லாயிரக் கணக்கானோர் காணாமல் போகின்றனர். போரில் இறந்ததாகவோ அல்லது புலம்பெயர்ந்து வந்ததாகவோ கணக்கில் வராத அனைவரும் காணாமல் போனோராகக் கருதப்படுகின்றனர்.  போர்க் காலங்களில் இவ்வாறு காணாமல் போனோரைப் பற்றி போரில் ஈடுபடும் அரசுகள் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.  தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழ்ச் சமூகத்தினராலும் மனித உரிமை அமைப்புகளாலும் ஐ.நா. பேரவையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக ஆகஸ்ட் 30ஆம் நாள் அனைத்துலக காணாமல் போனோர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலையின்போது பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் காணாமல் போய்விட்டனர்.  ஏறத்தாழ 25,000 தமிழர்கள் அவ்வாறு காணாமல் போய்விட்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது.  இவர்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னோடிகள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். போர் முடிந்து ஆறு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இவ்வாறு காணாமல் போன 25,000 பேர் பற்றி சிங்கள இனவெறி அரசு கிஞ்சிற்றும் அக்கறை காட்டவில்லை.  
 
அனைத்துலக நாடுகளின் அழுத்தத்திற்குப் பிறகு சிங்கள ஆட்சியாளர்கள் காணாமல் போனோர் தொடர்பாக சட்டம் ஒன்றை இயற்றியுள்ளனர். இச்சட்டத்தின்படி மாவட்டந்தோறும் காணாமல் போனோர் பற்றி விவரங்களைத் திரட்டவும், காணாமல் போனோர் தொடர்பாக சான்றிதழ் வழங்கவும், மாவட்டந்தோறும் செயலகங்களை உருவாக்கிடும் பணியில் சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது.  இதனால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை.
 
இனப்படுகொலை குறித்து, சிங்கள இனவெறியர்கள் இடம்பெறாத சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று தமிழ்ச் சமூகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் சிங்கள இனவெறியர்களின் கட்டுப்பாட்டிலேயே விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. இது தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும்.  இந்நிலையில், காணாமல் போனோர் தொடர்பாகவும் விசாரிக்கும் பொறுப்பை சிங்கள இனவெறியர்களிடம் ஒப்படைப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகும்.
 
எனவே, காணாமல் போனோர் நாளை அறிவித்துள்ள ஐ.நா. பேரவை சிங்கள இனவெறியர்கள் இடம்பெறாத வகையில் அனைத்துலக விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக