ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியான அவலம்

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் பலியான அவலம்

டெங்கு காய்ச்சல் ஆய்வு மையங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 
தமிழக அரசு உருவாக்கவேண்டும்திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்திற்கு அருகிலுள்ள காவேரிராஜபுரம் கிராமத்தில் 4 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர் என்கிற செய்தி மிகவும் வேதனையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக அக்கிராமத்தில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் குடிதண்ணீர் மற்றும் அகற்றப்படாத கழிவுகளால் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமும் மற்றும் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கையாக செயல்படாமல், டெங்கு நோயை கட்டுப்படுத்த தவறியதும்தான் ஒரே கிராமத்தை சேர்ந்த யுவராஜ், சந்தோஷ், மோகன் குமார், மோகன் ஆகிய நான்கு குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமாகும்.


கடந்த 2-8-2016 அன்று சட்டப் பேரவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மரணம் நிகழாது என்றும், அத்தகைய நிலை உருவாவதையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும், இக்காய்ச்சலால் மரணம் ஏற்படாத வகையில் முதல்வர் ஜெயலலிதா பாதுகாத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தில் கடந்த 2014இல் 1,146 பேரும், 2015இல் 2,357 பேரும் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது.  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாததால்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதற்கும் உயிரிழப்புகள் தொடர்வதற்கும் காரணமாகும்.  


இவ்வாண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 நாட்களில் அரசு மருத்துவமனையில் 1,049 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும், டெங்கு காய்ச்சலால் 4 குழந்தைகள் பலியான காவேரிராஜபுரம் கிராமத்தில் மேலும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும் தெரியவருகிறது. இதனால், அக்கிராமத்தைச் சார்ந்த மக்கள் அச்சத்தால் தங்களது கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து செல்லும் அவலநிலை உருவாகியுள்ளது.


ஆகவே, இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்பதுடன் தமிழகம் முழுவதும் உரிய முன்னெரிச்சரிச்கை நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது. அத்துடன், இத்தகைய உயிழப்புகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாததற்கு, அதற்குரிய பரிசோதனைக் கூடங்கள் இல்லாததுதான் காரணமாகும். ஆகவே, டெங்கு காய்ச்சல் ஆய்வு மையத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தமிழக அரசு உடனடியாக உருவாக்கவேண்டுமென்றும் காவேரிராஜபுரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் உயர்த்தர தீவிர சிகிச்சை அளிக்கவேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. பாதிப்புக்குள்ளான காவேரிராஜபுரம் மற்றும் அதனைச்சுற்றிள்ள கிராமங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மருத்துவ தொண்டு மையம் மக்களை நேரில் சந்தித்து உரிய விழிப்புணர்வையும் உதவிகளையும் செய்யும் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக