திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுக!

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் 
இடைநீக்கத்தைத் திரும்பப் பெறுக!
தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்தமிழக சட்டப்பேரவையிலிருந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 88 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  எதிர்க்கட்சித் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சபை காவலர்களால் குண்டுக்கட்டாகத் தூக்கிவந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் செல்வதற்கும்கூட அனுமதிக்கப்படவில்லை.  இந்த நடவடிக்கைகள் சட்டசபையின் மாண்புக்குக் கொஞ்சமும் உகந்தவையல்ல என்பதோடு தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சிதானா என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளன. 

திமுக உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்துசெய்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் அமைதியாக நடைபெற மாண்புமிகு பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

நமது அரசியலமைப்புச் சட்டம் சில சிறப்புரிமைகளை சட்டப் பேரவைத் தலைவருக்கு வழங்கியுள்ளது. ஆனால் அந்த அதிகாரத்தை ஜனநாயகத்தைக் காப்பதற்குத்தான் பயன்படுத்த வேண்டும்.  ஒட்டுமொத்தமாகப் பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வது அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதற்கு ஒப்பானதாகும்.  இதை பேரவைத் தலைவர் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசுவதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உள்ளது. அது ஆதாரமற்ற கருத்துகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது என்பதற்கான பாதுகாப்பே ஆகும். ஆனால் அந்த அதிகாரத்தை, அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விமர்சனமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதைப் பேசினாலும் அதை நீக்குவதற்குப் பயன்படுத்துவது முறையல்ல. 

இது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற காலமாகும். அரசாங்கத்தின் செயல்பாடுகள் எல்லாமே குடிமக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற நிகழ்ச்சிகளை நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுபோல சட்டப் பேரவை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதன்மூலமே சட்டப்பேரவை விவாதங்களின் தரத்தை உயர்த்தமுடியும். 

தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் பறிக்கப்பட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் அல்லல்படும்போது அதற்காக அவர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்துகிற நேரத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது கர்னாடக அரசுக்கு சாதகமாக அமைந்துவிடும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய முன்வரவேண்டுமென பேரவைத் தலைவரை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக