செப்.2 - அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் விசிகவின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்

மோடி அரசின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து
செப்.2 - அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில்
விசிகவின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்  

தொல்.திருமாவளவன் அறிக்கைதொழில் நிறுவனங்களில் ஒப்பந்தக் கூலி முறை, குறைவான கூலி, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் அங்கீகாரம், தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பொதுத்துறைப் பங்குகளை விற்பதைத் தடுத்தல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2-9-2016 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் இதே நாளில் (2-9-2015 அன்று) மேற்கண்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஆனால் மைய அரசு இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது தொழிலாளர் விரோதப் போக்கையும், மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.  அத்துடன், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உலக வர்த்தக அமைப்புகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதிலும் உள்நாட்டுத் தொழில்களை நசுக்கும் வகையிலும் பா.ச.க. அரசின் செயல்பாடு உள்ளது. 

தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் பா.ச.க. அரசு எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.  ஆனால், ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான டி.எம்.எஸ். தொழிற்சங்கத்துடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவது கேலிக்கூத்தாகும்.  
மைய அரசின் இத்தகைய தொழிலாளர் விரோதப் போக்கையும் மக்கள் விரோதப் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 

ஆகவே, உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்று மைய அரசையும், போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டுமென்று தமிழக அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இக்கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடிவரும் மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு 2-9-2016 அன்று நடைபெறுவதாக அறிவித்துள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அறிவர் அம்பேத்கர் போக்குவரத்துத் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி தமிழகத்தில் முழுமையாகப் பங்கேற்கும் என அறிவிக்கப்படுகிறது.


இவண்

0 comments:

கருத்துரையிடுக