பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த 1/6/2013 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு, டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது மீண்டும் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதனால் உழைக்கும் அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்தும் விலை உயர்வைத் தவிர்ப்பதற்குரிய வழியைத் தேடாமல், இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்கிறபோது மட்டுமல்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது என்கிற காரணத்தைக் காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஏற்றுமதி குறைவதும் இறக்குமதி அதிகமாவதும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்கின்ற முதலீடுகளை திடீரென்றும் திட்டமிட்டும் விற்பதால் அந்நியச் செலாவணி வெளியே செல்வதாலும்தான் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் இந்தியப் பணம் ரூபாய் 9 இலட்சம் கோடியை வெளிநாடுகளுக்கு அந்நியச் செலாவணியாக அல்லது டாலராக செலுத்துகிறோம். இதனைத் தடுக்கவும் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், இந்தியாவிலுள்ள ஏராளமான எண்ணெய் வளங்களையும் எரிவாயு வளங்களையும் கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிவதைத் தடுப்பதற்கு அதிகார வர்க்கம் முட்டுக்கட்டையாகவும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் தடையாகவும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்தையே மிரட்டுவதாகவும் உள்ளன என்பதை அத்துறையின் அமைச்சரே குற்றச்சாட்டுக் கூறுவது மிகுந்த அதிர்ச்சியக உள்ளது. 

ஆகவே, மைய அரசு இது குறித்து உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறிய வேண்டுமெனவும், அடித்தட்டு மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய்க் கொள்கையை வகுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், தற்போது அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வால் விலைவாசி மேலும் அதிகரித்து ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மைய அரசு உடனடியாக பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

0 comments:

கருத்துரையிடுக