சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை.  தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையிலும், இந்திய அரசு அதனை ஒருபொருட்டாக மதிப்பதில்லை.  

தற்போது, உதகையிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சிப் பள்ளியில் கடந்த 7-6-2013 முதல் சிங்களப் படையைச் சார்ந்த இருவருக்குப் பயிற்சிளித்து வருகிறது.  அடுத்தகட்டமாக, மேலும் நான்கு பேருக்குப் பயிற்சியளிக்க இருப்பதாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையானது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிப்பதாகவே உள்ளது.  தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் யாவும் இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்துள்ளனர்.  எனினும், இந்திய அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. சிங்கள இனவெறியர்களுக்கு இராணுவப் பயிற்சியளிப்பதை தமது அரசாங்கக் கடமையாக மட்டுமே இந்திய அரசு கருதுகிறது.  இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் நட்புறவாகவுள்ள நாட்டின் இராணுவத்தினருக்குப் பயிற்சியளிப்பது வழக்கமான நடைமுறையே என இந்திய அரசு வாதிடுவது, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.  

தமிழினத்தை சின்னாபின்னமாகச் சிதைத்த சிங்கள இனவெறி அரசின் போக்கை உலகின் பல்வேறு நாடுகள் வெளிப்படையாகக் கண்டித்துள்ள நிலையிலும், இந்திய அரசு மட்டும், சிங்களவர்கள் நடத்திய இனப்படுகொலையை அங்கீகரிப்பதைப் போலவும், ஊக்கப்படுத்துவதைப் போலவும் நடந்துகொள்வது மனிதநேயமற்ற அணுகுமுறையாகவே உள்ளது.  அதிலும் தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழகத்திலேயே அவ்வாறு பயிற்சியளிப்பது நாகரிகமற்ற நடவடிக்கையாகவுள்ளது.  கடந்த சில நாட்களாக உதகையிலும் கோவையிலும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடி வருகிற சூழலிலும், பயிற்சி பெற்றுவரும் சிங்களப் படை அதிகாரிகள், உதகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பொழுதைக் கழித்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.  

அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து சுற்றுலா செல்ல இந்திய அரசு உதவியுள்ளது.  இந்திய அரசின் இத்தகைய சிங்கள ஆதரவுப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, சிங்களப் படை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனவும், இனிமேல் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இத்தகைய பயிற்சியளிக்கக் கூடாது எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக