இந்தியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

இலட்சக்கணக்கான இந்தியர்கள் விசா பெற்று அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.  குறிப்பாக குவைத் நாட்டில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவ்வாறு அனுமதி பெற்று வீட்டு வேலை மற்றும் பிற வேலைகளில் சேர்ந்துள்ளனர்.  தற்போது குவைத் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் தமிழர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள், குறிப்பிட்ட வேலைக்கென விசா பெற்று பிற வேலைகளில் சேர்ந்து பணியாற்றுகிறவர்கள் என குவைத் அரசின் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியிருப்பவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் குவைத் அரசு ஈடுபட்டு வருகிறது.  அந்நாட்டு அரசின் சட்டத்திற்கு எதிரானவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  ஆனால், குவைத் அரசின் அணுகுமுறைகள் மனிதநேயமற்றதாகவும் ஜனநாயகமற்றதாகவும் இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.  சட்டப்படி விசா பெற்று சட்டம் அனுமதித்துள்ள கால வரம்புக்குள் அங்கே தங்கி பணியாற்றுவோரையும் விசாவில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி உரிய வேலையை செய்துகொண்டிருப்போரையும் தடாலடியாக பிடரியைப் பிடித்து நெட்டித் தள்ளுவதைப் போல மனிதாபிமானமற்ற முறையில், சட்டத்திற்கு விரோதமான வகையில் வெளியேற்றும் நடவடிக்கையை குவைத் அரசு மேற்கொண்டுள்ளது. குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கவோ, உடைமைகளைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கோ, உரிய ஆவணங்களுடன் வெளியேறுவதற்கோ கூட கால அவகாசம் அளிக்காமல் கண்ணில் தென்படுவோரையெல்லாம் பிடித்து நாடு கடத்தும் அடக்குமுறையை குவைத் அரசு கையாண்டு வருகிறது.  

கடந்த ஓரிரு வாரங்களில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  உடுத்தியிருக்கும் உடைகளுடன் பிடித்து உரிய ஆவணங்கள் இல்லாமல் நாடு கடத்தப்படுவதால் மும்பைக்கு வந்திறங்கும் இந்தியர்கள் இந்தியாவில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடுகிறது.  இந்திய அரசின் அதிகாரிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அகதிகளைப் போல் வந்திறங்கும் இந்தியர்களை மேலும் வதைகளுக்குள்ளாக்குவது வேதனையளிக்கிறது.  இதில் இந்திய அரசு தலையிடாமல் அமைதி காப்பதும், வேடிக்கை பார்ப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.  

இந்திய அரசு மட்டுமின்றி, தமிழக அரசும் குவைத் அரசினால் பாதிக்கப்படும் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனமாய் இருப்பது ஏனென்று விளங்கவில்லை.  தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து குவைத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  சட்டப்படி குவைத்தில் தங்கியிருப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சட்டத்திற்குப் புறம்பாக அங்கே தங்கியிருப்பவர்கள் முறைப்படி வெளியேறுவதற்கு உரிய நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.  குறிப்பாக, இந்திய அரசும் தமிழக அரசும் இணைந்து கலந்தாய்வு செய்து குவைத் நாட்டில் அல்லலுறும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் அந்நாட்டு அரசின் ஒடுக்குமுறைகளிலிருந்து பாதுகாப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக