என்.எல்.சி. பங்குகள் தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது!
என்.எல்.சி. பங்குகள்
தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது!
தொல்.திருமாவளவன் அறிக்கை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் அதே வேளையில், ‘விற்பனையைத் தவிர்க்க முடியாதெனில், அப்பங்குகளை தமிழக அரசே வாங்கிட வேண்டும்’ என்று கடந்த 22-6-2013 அன்று வேண்டுகோள் விடுத்தது. எமது வேண்டுகோளை ஏற்கும் வகையில் இன்று (26-6-2013) தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியத் தலைமை அமைச்சர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களுக்கு தமிழக முதல்வர் எழுதிய மடலில் என்.எல்.சி. பங்குகளை விற்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அதே வேளையில், அப்பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயப்படுத்தும் இந்திய அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் தமிழக அரசின் நிலைப்பாடு அமைந்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இலாபம் ஈட்டித் தருகிற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை வெளிப்படையாக தனியார்மயப்படுத்த அடித்தளமிடும் வகையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள இம்முயற்சியை எந்த வகையிலும் ஏற்க இயலாது.
ஆகவே, விற்பனை முயற்சியை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பதே தொழிலாளர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற சூலை 3ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இப்போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதோடு, இதில் விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணியும் தீவிரமாகப் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்திய அரசு தொழிலாளர்களின் வேண்டுகோளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியை முற்றிலும் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்துகிறது. இந்திய அரசின் இம்முயற்சியை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து போராட முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக