என்.எல்.சி பங்குகளைத் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கே விற்கவேண்டும் மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


லாபத்தில் இயங்கிவரும் என்.எல்.சி யின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டுமென வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்கள் ஜூலை 3 ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் வேலை நிறுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. 


இப்போது ஐந்து சதவீதப் பங்குகளை விற்பதென்று முடிவுசெய்திருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் எழுபது சதவீதப் பங்குகளை விற்பதே என்.எல்.சி நிறுவனத்தின் திட்டம்.இதை அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு.அன்சாரி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதாவது என்.எல்.சி யை ஒட்டுமொத்தமாகத் தனியாரிடம் தாரைவார்த்துக்கொடுப்பதே மத்திய அரசின் நோக்கம்.அதன் துவக்கம்தான் இந்த ஐந்து சதவீதப் பங்கு விற்பனை.என்.எல்.சி தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் நிலையில் இம்முடிவைக் கைவிடவேண்டுமென மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம். 

’செபி’யின் வழிகாட்டுதல்படி ’நவரத்னா’ நிறுவனம் பத்து சதவீதப் பங்குகளை விற்றுதான் ஆகவேண்டும், அதற்காகவே இதைச் செய்கிறோம்’ என மத்திய அரசு கூறி வருகிறது. அப்படி ’விற்றுதான் ஆகவேண்டுமெனில் அந்தப் பங்குகளைத் தமிழக அரசிடமே விற்கவேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியிருந்தது. எமது கட்சி முன்மொழிந்திருந்த அக் கோரிக்கையை ஏற்று தற்போது, ’’தமிழக அரசு தனது பொதுத்துறை நிறுவனங்களுக்காக அந்த ஐந்து சதவீதப் பங்குகளையும் வாங்கிக்கொள்ளத் தயார்” எனத் தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவரது முடிவு பாராட்டத் தக்கது. 

என்.எல்.சி மட்டுமின்றி தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்கள் யாவற்றிலும் கணிசமான பங்குகளைத் தமிழக அரசு வாங்கவேண்டும்.அதன்மூலம் அந்நிறுவனங்கள் தனியார்மயமாவதைத் தடுப்பது மட்டுமின்றி அவற்றை மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம். தமிழக முதல்வரின் வேண்டுகோளை மதித்து என்.எல்.சி யின் ஐந்து சதவீதப் பங்குகளையும் தமிழக அரசிடமே வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தியப் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 

மத்திய அரசில் அமைச்சர்களாக அங்கம் வகிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றிட உரியவகையில் உதவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறது. 
இவண் 
தொல்.திருமாவளவன் 

0 comments:

கருத்துரையிடுக