நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்கிக்கொள்ளவேண்டும்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்கிக்கொள்ளவேண்டும்!
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவீதப் பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும். தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ளாதது அதன் மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து இந்த முடிவைக் கைவிடுமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

என்.எல்.சி பங்குகளை விற்பதன்மூலம் நிதி திரட்டப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டிவரும் என்.எல்.சி நிறுவனம் இந்த ஆண்டில் 1400 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியிருக்கிறது. லாபத்தில் செயல்பட்டுவரும் அந்நிறுவனம் ’நவரத்னா’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு  இதேபோன்று பங்குகளை விற்க மத்திய அரசு முயன்றபோது அந்நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் ”2010 ஆம் ஆண்டு அக்டோபரில்  180 .65 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை வீழ்ச்சியடைந்து 75 ரூபாயாகிவிட்டது. இப்போது விற்பதால் நட்டம்தான் ஏற்படும்” என சுட்டிக்காட்டப்பட்டது. இன்று அது இன்னும் மோசமடைந்து ஒரு பங்கின் விலை 57 ரூபாய் என சரிந்துள்ளது. எனவே இப்போது பங்குகளை விற்பதால் மத்திய அரசு விரும்புகிற தொகையைத் திரட்டுவது இயலாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

2011 ஆம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க, ’ஆதரவைத் திரும்பப் பெறுவோம்’ என எச்சரித்ததால் மத்திய அரசு என்.எல்.சி பங்குகளை விற்கும் தனது முடிவை மாற்றிக்கொண்டது. இப்போது மத்திய அரசிலிருந்து தி.மு.க வெளியேறிவிட்ட நிலையில் காங்கிரஸ் அரசைக் கேட்பாரில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்போது பங்குகளை விற்பதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு முயற்சிக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். 

மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்த ஐந்து சதவீதப் பங்குகளையும் தமிழக அரசே வாங்கிக்கொள்வதற்கு முன்வரவேண்டும். என்.எல்.சி தனியார் மயமாவதைத் தடுப்பதற்கு அதுவே வழி. பங்குகளை தனியார் வாங்கினால் எதிர்காலத்தில் தமிழக அரசுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் விலையை உயர்த்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது.அந்தச் சுமை தமிழக மக்களின் தலையில்தான் ஏற்றப்படும். எனவே தொலைநோக்குப் பார்வையோடு என்.எல்.சி பங்குகளைத் தமிழக அரசே வாங்கிக்கொள்ள முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன் 
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

0 comments:

கருத்துரையிடுக