நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது

நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது
தொல்.திருமாவளவன் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்வதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று (28-5-2013) விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மத்திய அமைச்சர் மாண்புமிகு சிறிபிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  

அம்மனுவில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை எக்காரணத்தை முன்னிட்டும் விற்பனை செய்யக்கூடாது;  நெடுங்காலமாகப் பணியாற்றி வருகிற ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; நெய்வேலியில் உற்பத்தியாகிற மின்சாரத்தை முழுமையாக தமிழகம் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மனுவைப் பெற்றுக்கொண்டு மாண்புமிகு அமைச்சர் ஜெய்ஸ்வால் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை வழங்கியுள்ளார். முக்கியமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.  மேலும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களிடமும் தொடர்புடைய துறை அதிகாரிகளிடமும் விரைவில் பேசுவேன்.  பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்தச் சந்திப்பு 10 நிமிடங்கள் நிகழ்ந்தது.

0 comments:

கருத்துரையிடுக