தமிழர்களை இந்திய அரசு ஏமாற்றிவிட்டது
ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்
தமிழர்களை இந்திய அரசு ஏமாற்றிவிட்டது
தொல்.திருமாவளவன் கண்டனம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும் வகையிலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிவிக்கும் வகையிலும் இந்திய அரசு திருத்தங்களை முன்மொழிய வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் வலியுறுத்தி வந்தோம். அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்ட நேரத்திலும்கூட மத்திய அமைச்சர்கள் இதே கருத்தைத்தான் தெரிவித்து வந்தனர். தாங்கள் முடிவெடுப்பதற்கு முன்பாகவே திமுக அவசரப்பட்டுவிட்டது என்றும் குற்றம்சாட்டி வந்தார்கள். ஆனால், அவர்கள் கூறிவந்ததற்கு மாறாக, ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது இந்திய அரசு நடந்துகொண்டுள்ளது. இலங்கையில் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மட்டுமே இந்தியா கருத்துத் தெரிவித்தது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்றோ, சர்வதேச விசாரணை வேண்டுமென்றோ இந்தியா கோரவில்லை. அது மட்டுமின்றி, அமெரிக்கத் தீர்மானத்தில் எந்தவொரு திருத்தத்தையும் முன்மொழியவில்லை. இது தமிழக மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தி அவமதிக்கிற செயலாகும். இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய அரசு தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன. ஆனால், ஐ.நா. அவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள், தீர்மானங்கள் பலவற்றில் இந்தியா கையெழுத்திடவில்லை. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை அமைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரோம் ஒப்பந்தத்திலும் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. இவ்வாறு சர்வதேச அளவில் மனித உரிமைகள் தொடர்பாக நிறைவேற்றப்படும் ஒப்பந்தங்களை மதிக்காத ஒரு நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. அதனால்தான் இனப்படுகொலை நாடான இலங்கையை இந்தியா ஆதரிக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் எழுச்சியோடு போராடிக் கொண்டிருக்கிற மாணவர்களும் பொதுமக்களும் இந்தியாவை சனநாயகப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இந்தியா ஒரு சனநாயக நாடாகவே இருந்தால்தான் இன்னொரு நாட்டில் அது சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுக்க முடியும். எனவே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நம்முடைய போராட்டம் இந்திய அரசின் சனநாயக விரோதப் பண்பினை அம்பலப்படுத்துவதாக நீட்சி பெற வேண்டும். அதற்கு சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவி அழைக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் பங்கேற்கக் கூடாது என அந்நாட்டின் சனநாயகச் சக்திகள் தீவிரமாகக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேபோல இந்தியாவும் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்கிற வகையில் அம்மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் அமைய வேண்டும் என்பதை இச்சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக