புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி, விருதுகள் வழங்கும் விழா


புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி, விருதுகள் வழங்கும் விழா 

தொல்.திருமாளவன் அறிவிப்பு


மார்ச் 22ந்தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மக்கள் ஒற்றுமைப் பேரணி ஒன்றை நடத்துவதெனவும் அதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதெனவும் அறிவித்திருந்தோம்.  ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவிருந்த சூழலில், அது தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரும்வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுக்க நேர்ந்தது.  அதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மக்கள் ஒற்றுமைப் பேரணி தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.  தற்போது அதனை புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் சென்னையில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பேரணியின் முடிவில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். பேரணியிலும், விருதுகள் வழங்கும் விழாவிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

தமிழ்ச் சமூகத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகப் பாடாற்றும் ஆளுமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி விடுதலைச் சிறுத்தைகள் சிறப்பித்து வருகிறது.  அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. விருதுபெறும் சான்றோருக்கு பட்டயமும், ரூபாய் 50 ஆயிரம் பணமுடிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை திமுக தலைவர் கலைஞர், தி.க. தலைவர் கி.வீரமணி, தோழர் ஆர்.நல்லக்கண்ணு, தோழர் வரதராசன் போன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.  இந்த ஆண்டும் விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.  விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட சான்றோருக்கு அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் நாள் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்


0 comments:

கருத்துரையிடுக