தமிழர் எவரும் தீக்குளிக்க வேண்டாம்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சர்வதேசச் சமூகம் இப்பொழுதுதான் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. கொடுங்கோலன் இராஜபக்சேவால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்களின் சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் ஈழத் தமிழர் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்துமா, இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவை கண்டிப்பதற்கு வழிவகுக்குமா என்று உலகத் தமிழர்களெல்லாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் நம்மை அதிர்ச்சியுற வைப்பதுபோல் கடலூரில் தமிழ் உணர்வாளர் மணி தீக்குளித்து தனது இன்னுயிரைத் தியாகம் செய்திருக்கிறார். ஈழப் போராட்டத்துக்காக ஈகியான தோழர் மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் தமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும், ஈழம் மலர்ந்து தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும். அதற்காக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மால் இயன்ற அளவுக்குப் போராட வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில், விரக்திக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்வதென்பது ஈழ மக்களுக்காகப் போராட வேண்டியவர்களின் வலிமையைக் குறைப்பதாகவே இருக்கும்.
எனவே, தமிழர்கள் எவரும் தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்குச் செல்ல வேண்டாம் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
கொலைகாரர்களைத் தண்டிப்பதற்கு தற்கொலை என்பது ஒரு வழியாக இருக்காது. ஈழப் போராளிகள் தம்மை அழித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்த யுக்தி போர்க்களத்திற்குத்தான் பொருந்துமே தவிர போராட்டக் களத்துக்குப் பொருத்தமாக இருக்காது. எனவே தமிழர்கள் தீக்குளித்து தம்மை அழித்துக்கொள்ள முற்பட வேண்டாம். இழந்த உயிர்கள் போதும்; இனியும் நாம் பலியாவது கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக