மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! தொல்.திருமாவளவன் கருத்து
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. பொதுத் தேர்தலுக்கு முன்பு சமர்ப்பிக்கப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதாலும் பல ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்ற ப.சிதம்பரம் அவர்கள் சமர்ப்பிக்கும் நிதி நிலை அறிக்கை என்பதாலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட 2013-14ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை எந்தவொரு எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மாதச் சம்பளம் வாங்குகிற நடுத்தர வர்க்கத்தினர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வந்தனர். அவர்களுக்கு எந்தவொரு ஆறுதலையும் இந்த நிதிநிலை அறிக்கை தரவில்லை. தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு மிகவும் குறைவான நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதன்மூலம் அவர்களை இந்த நிதி நிலை அறிக்கை வஞ்சித்துவிட்டது என்றே சொல்லவேண்டி உள்ளது.
பெரிய அளவில் புதிய வரிவிதிப்புகள் இல்லாவிட்டாலும்கூட மறைமுக வரிவிதிப்புகளும், விவசாயம் உள்ளிட்ட துறைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் பயன்படாது. அதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கும்கூட போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. உலகில் சுகாதாரத் துறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடாக இந்தியாதான் இருக்கிறது. அண்டையிலுள்ள இலங்கைகூட, சுகாதாரத்திற்காக இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டைவிட இரண்டு மடங்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்கிறது. கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியும்கூடப் போதுமானதாக இல்லை. மத்திய அரசின் 'சர்வசிக்சா அபியான்' திட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் திருமதி இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதன்படி பார்த்தால் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் 16 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வெறும் 7 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது அந்த மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்டுகிற நிதியும்கூட மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றி விடப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதனைத் தடுப்பதற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. நிதி அமைச்சர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழகத் திட்டங்களுக்காக இம்முறையாவது பெரிய அளவில் நிதி ஒதுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நிதிநிலை அறிக்கையின் முடிவில் திருக்குறள் ஒன்றைச் சொல்லி தமது தமிழ்ப் பற்றைக் காட்டிக்கொண்ட நிதியமைச்சர் தமிழகத்திற்கென சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்றப்போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அதற்கென பத்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைவான இந்தத் தொகையைக் கொண்டு வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களில் பாதி பேருக்குக்கூட உணவுப் பாதுகாப்பை வழங்க முடியாது.
மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களை வஞ்சித்திருக்கிறது. மத்தியதர வர்க்க மக்களை மேலும் கசக்கிப் பிழிவதாக இருக்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக