இலங்கை இப்போதும் நட்பு நாடுதானா?


தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்
இலங்கை இப்போதும் நட்பு நாடுதானா?
தொல்.திருமாவளவன் ஆவேசம்!


கோடியக்கரைக்கு அருகே இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் (வயது 40) என்கிற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். படகுகள் நாசமாகியிருக்கின்றன. இரண்டொரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளது.  அவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறிய பின்னரும் இதுவரை இலங்கை அரசு அதை மதிக்கவில்லை.  இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.  ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடந்தபோது இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு என்று நமது வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டார்.  தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும்விதமாக அந்தப் பேச்சு இருந்தது.  இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததோடல்லாமல், இந்தியத் தமிழ் மீனவர்கள் மீதும் இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதுவரை 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை படுகொலை செய்திருக்கிறது.  இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை ஒப்பந்தத்துக்கு மாறாக இலங்கை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.  இவ்வளவுக்குப் பின்னரும் இலங்கை ஒரு நட்பு நாடு என்று இந்தியா சொல்வது நமக்குப் புரியாத புதிராகவே உள்ளது.  

இந்திய இராணுவ வீரர் ஒருவரை பாகிஸ்தான் இராணுவத்தினர் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தி தெரிந்து இந்தியாவே கொந்தளித்தது.  பாகிஸ்தானுடன் போர் மூளக்கூடும் என்ற அளவுக்கு இந்திய அரசின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன.  ஆனால், 500க்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டபோதும் இந்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.  படுகொலை செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் இப்படி பாராமுகமாக இருக்கிறார்களா என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.  இதற்கு இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.  இப்போதும் இலங்கை இந்தியாவின் நட்பு நாடுதானா என்பதை இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக