காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்!
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்!
பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், இப்போது இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் என்ற போதிலும் இதனாலேயே காவிரியில் நீர் வந்துவிடாது என்பதையும் மறுப்பதற்கில்லை. மத்திய அரசு சுமார் 6 ஆண்டு காலம் கிடப்பில் போட்டிருந்து, உச்ச நீதிமன்றத்தின் நெருக்குதல் காரணமாகவே இந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். அதுபோலவே காவிரி ஒழுங்குமுறைக் குழுமம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்தால்தான் அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வரும். இவை மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் இதற்கென சட்டம் ஒன்றும் இயற்றப்பட வேண்டும்.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துவந்த கர்நாடக அரசும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதில் முனைந்திருக்கின்றன. இதற்கு பிரதமர் இடம்கொடுத்துவிடக் கூடாது. நதிநீர் உரிமையில் வஞ்சிக்கப்பட்டு தமிழக மக்கள் ஏற்கனவே மனம் வெதும்பிக் கிடக்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் கருகிப் போன பயிர்களுக்கு மத்திய அரசு இதுவரை எந்த இழப்பீட்டையும் தராதது தமிழக மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1991ஆம் ஆண்டு நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபோது கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தைத் தூண்டினார்கள். அதில் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இப்போதும் அதைப்போல கலவரத்தில் ஈடுபட கன்னட வெறியர்கள் முயற்சிப்பதன் அறிகுறிகள் தெரிகின்றன. கர்நாடகத்தில் தொடர்வண்டி நிலையம் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. எனவே கர்நாடக மக்கள் தொகையில் 6 விழுக்காட்டினராக இருக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
(தொல். திருமாவளவன்)
0 comments:
கருத்துரையிடுக