பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு!
தொல்.திருமாவளவன் அறிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எண்ணெய்ப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கொள்கை தவறானது, எண்ணெய் விலையை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்பது ஏழை, எளிய மக்களுக்கு எதிராகத்தான் போய் முடியும் என்று சுட்டிக்காட்டியிருந்தோம். இதையே இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கூறியிருந்தன. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக்கொள்ள மறுத்து வருகிறது. அதன் விளைவாக, ஏழை எளிய மக்கள் தாங்க முடியாத நிதிச் சுமையால் அல்லல்படவேண்டியிருக்கிறது.
சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் மிகப் பெரிய விலை உயர்வு எதுவும் இல்லாத நிலையில், இந்தியாவிலிருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டே வருகின்றன. இது இந்திய அரசின் கொள்கை மாற்றத்தின் விளைவேயாகும். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை உயர்வு எவ்விதத்திலும் ஞாயமானது அல்ல. எனவே, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும், முன்பு இருந்தது போல பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு மீண்டும் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக