கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா?


கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா?
நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக!
இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் 


அப்சல் குருவின் ரத்தம் உலர்வதற்கு முன்பே அடுத்த உயிர்களைக் காவுகொள்ள இந்திய அரசு தயாராகிவிட்டது.  வீரப்பன் கூட்டாளிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கண்ணிவெடித் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நான்கு தமிழர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இஸ்லாமியரைக் கொன்ற கையோடு நான்கு தமிழர்களைக் கொல்வதற்கு இந்திய அரசு முடிவுசெய்துவிட்டது. இந்த நாட்டில் இஸ்லாமியர்களும் தமிழர்களும்தான் கேட்பதற்கு நாதியற்றவர்கள் என்பது இதன்மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்திய அரசின் இந்தக் கொலைவெறியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

அப்சல் குருவின் தூக்குத் தண்டனை குறித்து விமர்சித்த ஓமர்அப்துல்லா, "இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு செயல் அல்ல என்பதை அரசு தனது செயலின் மூலம் நிரூபிக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். அப்போதே அடுத்து மரணம் யாருடைய கதவை தட்டப் போகிறதோ என்ற ஐயம் எழுந்தது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்குமோ என அஞ்சினோம். ஆனால் நாம் எவரும் எதிர்பாராவிதமாக இப்போது வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்திருக்கிறார்.

வீரப்பன் கூட்டாளிகள் எனப்படுவோர் மீது காலாவதியான தடா சட்டத்தில்தான் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கில் முதலில் ஆயுள் தண்டனைதான் விதிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில்தான் மரணதண்டனை விதித்தார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களே தங்களை நிரபராதிகள் என நிரூபித்துக்கொள்ளவேண்டும் என, ஆதாரம் அளிக்கும் பொறுப்பை குற்றவாளிகள் தலையில் சுமத்தும் தடா சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால்தான் அதை இந்திய அரசு கைவிட்டது. அந்தச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை இப்போது கொல்ல நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கலாம் என முன்னர் உச்சநீதிமன்றம் சொன்னதே கூட மறு ஆய்வு செய்யப்படவேண்டும் என இப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மேலும் மேலும் தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றுவது இந்தியாவை உலக அரங்கில் இழிவான நிலைக்கே இட்டுச் செல்லும். உலகின் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்டுவிட்ட நிலையில் இந்திய அரசின் இத்தகைய போக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது. 

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் இப்படிச் செய்கிறதோ என்று ஐயப்படவேண்டியிருக்கிறது. காவிரியில் தண்ணீர் தராமல் தமிழகத்தை கர்நாடகம் வஞ்சித்துவரும் இந்த நேரத்தில், கர்நாடகத்தைக் குளிரச் செய்வதற்காக இந்த மரண தண்டனை விதிக்கப்படுகிறதா? அப்படியிருந்தால், அது தமிழர்களை மேலும் அவமதிக்கும் செயலாகும். எனவே, இந்த நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதோடு மரண தண்டனைக்கு நிரந்தரமாக முடிவுகட்டவும் இந்திய அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக