பாலியல் வன்முறைகளைத் தடுக்க தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு தொல்.திருமாவளவன் வரவேற்பு!


பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கோடு தமிழக அரசு சில அறிவிப்புகளைச் செய்திருக்கிறது.  காவல்துறையினருக்கு பெண்கள் தொடர்பான சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி வந்தது.  தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.  இதற்காக தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள மற்ற அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இல்லை.  இத்தகைய வன்முறையில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.  குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு.  பிணையில் வரமுடியாத இத்தகைய சட்டங்கள் காவல்துறையினரின் தவறான பயன்பாட்டுக்கே வழிவகுக்கும்.  எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு செய்யத் திட்டமிட்டுள்ள திருத்தங்களைக் கைவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் கூறியுள்ளார்.  அமெரிக்காவிலும், இரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் இத்தகைய தண்டனை முறை நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக, பெண் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் ஆண்களுக்கு இந்தத் தண்டனையை அந்நாடுகளில் விதிக்கிறார்கள்.  ஆனால், இதை உலகமெங்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றனர்.  இத்தகைய தண்டனை முறை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற பழிவாங்கும் நோக்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.  நாகரிக சமுதாயத்தில் இதற்கு இடம்தரக்கூடாது.  எனவே, இத்தகைய தண்டனை முறைகளை நம் நாட்டில் புகுத்த வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பாலியல் குற்றங்கள் தொடர்பாக அமைக்கப்படவிருக்கும் விரைவு நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களையே நியமிக்க இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.  இதனை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.  நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கு உரிய பங்கேற்பை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம்.  அரசு வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.

காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை வருவாய்த் துறையினருக்கும் நீதித்துறையினருக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தி அறிவிக்க வேண்டும்.  இந்தத் திட்டத்தோடு, கடந்த அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் தொடர்பான சட்டங்கள் குறித்து அதிகாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்துக்கும் தமிழக அரசு புத்துயிர் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக