இணைவோம் ஒன்றாய்! வாழ்வோம் இணையாய்!

சாதி-மத ஆதிக்கத்தை வேரறுக்கவும் ஆணாதிக்க ஆணவத்தைத் தகர்த்தெறியவும்
இணைவோம் ஒன்றாய்! வாழ்வோம் இணையாய்!

தொல்.திருமாவளவன் பொங்கல் வாழ்த்து!

தமிழினத்தின் பாரம்பரியப் பண்பாட்டுஅடையாளமாக இன்று நம்மிடையே மிச்சமிருப்பது பொங்கல் விழா மட்டுமே ஆகும். தமிழர்கள் கொண்டாடும் பெரும்பாலான விழாக்கள் தமிழினத்தின் பண்பாட்டுக்குத் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. தீபாவளிபண்டிகை, தசரா பண்டிகை, ஹோலி பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு என புதிய கலாச்சார அடையாளங்களைச் சுமந்து தமது சொந்த அடையாளத்தை மெல்லமெல்ல இழந்துவரும் தமிழன், மிச்சமாய்சொச்சமாய் கொண்டாடிவரும் பாரம்பரிய அடையாளத்தின் ஒரே பெருவிழாதான் பொங்கல் திருவிழாவாகும்.

உழைப்பைப் போற்றுவதும் உழவுத் தொழிலை வந்தனை செய்வதும் கூட்டுறவு வாழ்க்கையை வலுப்படுத்துவதும் போன்றஉயர்ந்த நோக்கங்களை உள்ளடக்கமாகக் கொண்ட உன்னதத் திருவிழாவாம் பொங்கல் விழாவை தொடர்ந்து தமிழினம் கொண்டாடுமா என்னும் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காவிரி நீர்ச் சிக்கலாலும், முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலாலும் தமிழகத்தில் வேளாண் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெªல் என்று ஆனைகட்டிப் போரடிக்கும் சோணாடு’ என்னும் பெருமைக்குரிய தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சைப் பெருநிலத்தில் தமிழன் இன்று தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். குறுவை, சம்பா சாகுபடியெல்லாம் பொய்த்துப்போன நிலையில் வறட்சியும் வறுமையும் வாட்டும் கொடுமையில், கடன்சுமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள முடியாத நெருக்கடிகளில் சிக்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறான். உழவுத் தொழிலைப் போற்றும் இத்தகைய உழவனால் பொங்கல் விழாவை எப்படிக் கொண்டாட முடியும்?
உழைக்கும் உழவுத் தமிழர்கள் இத்தகைய சவால்களை ஒருபுறம் எதிர்கொண்டுவரும்நிலையில் அவர்களுக்கிடையில் சாதிவெறி உணர்வைத் தூண்டி, பகை நெருப்பை மூட்டி தன்னலத்தை மட்டுமே குறியாகக் கொண்டுள்ள கும்பல் அதில் குளிர்காயத் துடிக்கிறது. அப்பாவி உழைக்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டவிழ்த்து, கொள்ளை, தீ வைப்பு போன்ற கொடூரமான தாக்குதல்களை நடத்தி பாட்டாளி மக்களிடையே நிலவும் பண்பாட்டு அடிப்படையிலான உறவுகளையும் சிதைத்துவருகிறது. அதற்கு சாட்சியமாக தருமபுரியும் இன்று அந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. சொந்தமண்ணிலேயே அனைத்தையும் இழந்து அகதிகளாய் அல்லல்படும் அடித்தட்டு மக்களால் எப்படி பொங்கல் விழாவைக் கொண்டாட முடியும்?
உலகமே வியக்கும் ஓங்குபுகழ் வீரத்தின் அடையாளமாய் மானுட வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஈழத் தமிழினம் இன்று விவரிக்க இயலாத வேதனைநெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது. அகதிகளாய் அனாதைகளாய் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கிறது. அத்தகைய ஈழத்தமிழனால் எவ்வாறு பொங்கலைக் கொண்டாட முடியும்?

இந்நிலையில், தமிழினம் எதிர்கொள்ளும் இத்தகைய அவலங்களைக் கருத்தில்கொண்டு தமிழினத்தின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் இவ்வாண்டும் பொங்கல் கொண்டாட்டத்தைத் தவிர்க்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்ற 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக தமிழர்களின் ஒரே தேசிய அடையாளமான பொங்கல் உள்ளிட்ட பண்டிகைத் திருநாள் கொண்டாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் தவிர்த்து வருகிறது.
தமிழர்கள் கொண்டாட வேண்டிய, பாதுகாக்க வேண்டிய, தக்க வைத்துக்கொள்ள வேண்டிய பண்பாட்டு அடையாளமான பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டாம் என்று தமிழர்கள் யாவருக்கும் வேண்டுகோள் விடுப்பதில்எமக்கு உடன்பாடில்லை.
ஆயினும், பொங்கலைக் கொண்டாடும் உழைக்கும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். சாதி-மத ஆதிக்கத்தை வேரறுக்கவும், ஆணாதிக்க ஆணவத்தைத் தகர்த்தெறியவும் உழைக்கும் மக்களாய் இணைவோம் ஒன்றாய்! வாழ்வோம் இணையாய்! என்று இந்தப் பொங்கல் திருநாளில் உறுதியேற்போம்!
இவண்
தொல்.திருமாவளவன்

2 comments:

Your r great.

12 மார்ச், 2013 அன்று AM 8:12 comment-delete

Your r great.

12 மார்ச், 2013 அன்று AM 8:14 comment-delete

கருத்துரையிடுக