பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் அறிவிக்க வேண்டும்! - தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்


டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரும் கருகிய நிலையில் முற்றிலுமாக  வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் விவசாயிகள் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.  விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு கடந்த மூன்று நாட்களாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

விவசாயிகளுக்கு ஏக்கர் 1க்கு ரூபாய் 25,000-மும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 10,000-மும் நிவாரணமாக வழங்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும், பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துப் போராடி வருகின்றனர்.  மூன்று நாட்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டும்கூட தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக உள்ளது.

ஞாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் விவசாயிகளுக்கு எமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதோடு, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக நிவாரணத்தை அறிவிக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக