பண்ருட்டி அருகே சாதிய வன்கொடுமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பண்ருட்டி அருகே சாதிய வன்கொடுமை
மேலிருப்பு கிராமத்தில் கொலைவெறித் தாக்குதல் - கொள்ளை- தீ வைப்பு!
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- தொல்.திருமாவளவன்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மேலிருப்பு என்னும் கிராமத்தில் காணும் பொங்கல் நாளான இன்று (16-1-2013) தலித் மக்களின் மீது சாதிவெறிபிடித்த ஒரு வன்முறைக் கும்பல் திடீரெனக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. தருமபுரியில் நடத்தியதைப் போலவே தலித் மக்களின் குடியிருப்புகளைத் தாக்கி, சொத்துக்களைச் சூறையாடி, கொள்ளையடித்த பின்னர், அக்கும்பல் குடிசைகளுக்குத் தீ வைத்துள்ளது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளன. ஏராளமான ஓடு வேய்ந்த வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதால் முற்றிலும் சிதைந்துள்ளன. சாதிவெறியர்களின் இத்தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 5 பேர் படுகாயமுற்று பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஊருக்குச் செல்லும் பாதையில் சாதிவெறியர்கள் சிலர் குடிபோதையில் போவோர் வருவோரிடம் வம்பிழுத்துள்ளனர். அவ்வழியே தமது குடியிருப்புக்கு இரு சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த தலித் இளைஞர்கள் சிலர் 'போவதற்கு வழிவிடுங்கள்' என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் தலித் இளைஞர்கள் என்று அறிந்துகொண்டதனால் ஆத்திரமடைந்த அந்த வன்முறைக் கும்பல், தலித் இளைஞர்களை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன் அவர்களைத் தாக்கியுமுள்ளனர். அத்துடன் நில்லாமல், தலித் இளைஞர்கள் எதிர்த்துப் பேசினார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த சாதிவெறியர்களையும் திரட்டிக்கொண்டு தலித் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்து கொடூரமான முறையில் சாதி வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இரு தரப்பிலும் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காக நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்குவது, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடுவது எந்த வகையில் ஞாயம் என்று தெரியவில்லை.
இதற்கு சாதி சங்கத்தைப் பின்னணியாகக் கொண்ட அரசியல் கட்சி ஒன்றே காரணம் என்று தெரியவருகிறது. இந்தத் தாக்குதலும் தருமபுரியைப் போலவே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இவ்வாறான சாதிய வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். சாதியவாதிகளின் இந்தச் சமூக விரோதப் போக்கை தமிழக அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தாக்குதல் நடக்கும்போது காவல்துறையினரும் அங்கே இருந்திருக்கிறார்கள் என்பதும் இதனைத் தடுப்பதற்கு காவல்துறையினர் எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தருமபுரித் தாக்குதலை மீண்டும் நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது.
இந்த சாதிவெறியாட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் வடமாவட்டங்களில் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், தலித் மக்களின் குடியிருப்பையொட்டி அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், உரிய இழப்பீடுகளை வழங்கவும் ஆவன செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.



இவண்

 
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக