தலித் மக்களின் மீது நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து அனைத்துகட்சி சார்பில் ஆர்பாட்டம்
தர்மபுரி, நாமக்கல் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் அரங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர் திருமாவளவன் பேசியது : ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காக எதிராக தலித் அல்லாத ஜாதி அமைப்புகளின் கூட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடத்தியுள்ளார்.
அதில் தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தனை ஜாதி அமைப்புகள் என் பின்னால் இருக்கிறது. எனவே, அதிகமான தொகுதிகள் தர வேண்டும் என தேர்தல் நேரத்தில் பேரம் பேசுவதற்காகவே ராமதாஸ் ஜாதி தலைவர்களை அணி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தருமபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யாவின் தந்தை நாகராஜின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, தருமபுரி கலவர வழக்கை மட்டுமல்ல, நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார் திருமாவளவன்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: அரசியல் ஆதாயங்களுக்காக ஜாதி சங்கங்கள் மூலம் மக்களை பிளவுபடுத்தும் அபாயகரமான வேலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது. தமிழகத்தில் 3,000-க்கும் அதிகமான வடிவங்களில் தீண்டாமை கொடுமை இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
தருமபுரி கலவர வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: தருமரியில் நடந்த வன்முறை சம்பவங்களைத் தடுக்க காவல் துறை தவறியுள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். தலித் மக்களுக்கு எதிராக தலித் அல்லாத ஜாதிகளை ஒருங்கிணைப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வன்முறை தொடர்பாக வழக்குகளை சிபிஐ விசாரணை விசாரிக்க வேண்டும், உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன் மற்றும் நல்லக்கண்ணு, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி, திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக