தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பு: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365ன்கீழ் கர்நாடக அரசை முடக்க வேண்டும்!


தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பு: அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365ன்கீழ் கர்நாடக அரசை முடக்க வேண்டும்!
மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை


உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தும் கர்நாடக அரசு பிடிவாதமாக மறுத்திருக்கிறது.  தமிழகத்துக்குச் சேரவேண்டிய தண்ணீரில் பாதி அளவாவது கொடுங்கள் என்று தமிழக முதல்வர் கேட்டும்கூட கர்நாடக அரசு ஒப்புக்கொள்ளவில்லை.  1 டி.எம்.சி. தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது என்பதே கர்நாடக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.  மைய அரசின் ஆணையையும் உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் கர்நாடக அரசு நிராகரித்திருப்பதன் மூலம் இந்தியாவில் ஓர் அரசியல் அமைப்புச் சட்டச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.  

தமிழகத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளன.  ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் இந்த நெருக்கடியைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.  இதுவரை நான்கு விவசாயிகள் அவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.  கர்நாடகாவின் பிடிவாதமான போக்கால் இன்னும் பல விவசாயிகள் தங்களை மாய்த்துக் கொள்ளக்கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.
தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரைத் தராமல் இப்படி ஒரு அரசியல் அமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கியிருக்கும் கர்நாடக அரசைக் கலைப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமுள்ளது.  எனினும் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்பதற்கு மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின்படி முடக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கிறது.

அதாவது, மத்திய அரசு பிறப்பிக்கும் ஞாயமான உத்தரவுகளை மாநில அரசு நடைமுறைப்படுத்த மறுக்கும்போது அந்த மாநில அரசை முடக்கி வைப்பதற்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365 அதிகாரம் அளிக்கிறது.  மத்திய அரசின் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவர் இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.  உறுப்பு 356ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பதற்குத்தான் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதே தவிர உறுப்பு எண் 365ஐப் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை.  

கர்நாடக அரசின் அணுகுமுறை தமிழக விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது என்பது மட்டுமல்ல, இந்தியாவின் கூட்டாட்சி முறையையே சிதைப்பதாக அமைந்திருக்கிறது.  இந்த நேரத்தில் மத்திய அரசு தமது அதிகாரத்தைப் பயன்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா ஒரே நாடாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே மத்திய அரசு தயங்காமல் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 365ன் கீழ் கர்நாடக அரசை முடக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துவிதமான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்கிறது என்றாலும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளும் தமிழக மக்களும் ஒரே கருத்தோடு தம் பின்னே அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தத் தயக்கம் காட்டுகிறது.  உச்ச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரத்தில் இங்கிருக்கிற அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் அனைவரும் தமிழக அரசோடு ஒருங்கிணைந்து நிற்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டும்வகையில் உடனடியாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  அத்துடன், தமிழக சட்டப் பேரவையில், அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 365ஐப் பயன்படுத்தி கர்நாடக அரசை முடக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிற தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக