'டெல்டா பந்த்' போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு


கர்நாடக அரசை எதிர்த்து விவசாயச் சங்கங்கள் நடத்தும்
'டெல்டா பந்த்' போராட்டத்துக்கு
விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு
தொல்.திருமாவளவன் அறிவிப்பு


மத்திய அரசு ஆணையிட்டும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக விவசாயச் சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் எதிர்வரும் திசம்பர் 7ஆம் நாள் 'டெல்டா பந்த்' எனும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.  இதனை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பியுள்ளன.  தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பந்த் போராட்டத்தை ஆதரிப்பதென விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 12 இலட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் நீரில்லாமல் கருகிக் கொண்டிருக்கிறது.  ஏற்கனவே குறுவை சாகுபடியும் இல்லாது போய்விட்ட நிலையில் சம்பாவையும் பறிகொடுத்துவிட்டு விவசாயிகள் தவித்து நிற்கிறார்கள்.  சிலர் தற்கொலை செய்துகொண்டு மடிந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரில் 1 சொட்டுத் தண்ணீரைக்கூடத் தர முடியாது என்று மாந்தநேயமற்ற முறையில் கர்நாடகம் பிடிவாதம் பிடித்துவருகிறது.  கர்நாடக அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் விவசாய இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.  அவர்களின் ஞாயமான போராட்டத்தை ஆதரிப்பதும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கிறோம் என உலகுக்கு எடுத்துக்காட்டுவதும் தமிழ்நாட்டில் உள்ள அனைவரது கடமையாகும்.

திசம்பர் 7ஆம் நாள் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு அனைத்துவிதமான ஆதரவுகளையும் வழங்குமாறு டெல்டா மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  விவசாயிகளின் உணர்வுகளை மதித்து தமிழகத்தின் அரசியல் கட்சிகள் யாவும் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க முன்வர வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக