சென்னையில் பாலியல் கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்ட கல்லூரி மாணவி பிரியா, தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவி புனிதா, நாகை மாவட்டம் தலைஞாயிறு பள்ளி மாணவி மற்றும் டெல்லி மருத்துவ மாணவி ஆகியோருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் நாடெங்கும் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத்தின் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எஸ்.கே.மகேந்திரன், இந்திய மகளிர் தேசிய சம்மேளனத்தின் சுசிலா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கே.வனஜாதேவி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:–
இந்திய ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது
டெல்லியில் 20 வயது மருத்துவ மாணவி 6 பேரால் கற்பழிக்கப்பட்டது மிகவும் கொடூரமான சம்பவம். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில், மாணவர்கள் இன்று வரை போராடி கொண்டிருக்கிறார்கள். டெல்லி சம்பவத்தால் உலக அளவில் இந்திய ஜனநாயகமே சந்தி சிரிக்கிறது.
தமிழகத்திலும், தர்மபுரி சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும், தமிழகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் வன்கொடுமைக்கு எதிராக ஏராளமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அமலுக்கு வரவில்லை. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியா முழுவதும்...
ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:–
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். டெல்லி மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன.
தமிழகத்திலும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, தூத்துக்குடி மாவட்டத்தை சோந்த பள்ளி மாணவி புனிதா ஆகியோர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நீதி விசாரணை ஆணையம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு என்னும் இடத்திலும் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விருத்தாசலம் அருகே ஒரு இளம்பெண் 10 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க தமிழக அரசு நீதி விசாரணை ஆணையம் ஒன்று அமைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Photos : Imayam
0 comments:
கருத்துரையிடுக