தில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம்பெண் மரணம் – தொல்.திருமாவளவன் இரங்கல்
தில்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறது.
தில்லி நிகழ்வையொட்டி நாடெங்கும் எழுந்துள்ள போராட்டங்களின் விளைவாக மைய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகக் கூறியுள்ளது. இந்தியாவெங்கும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வழக்குகள் காவல்துறை விசாரணை மட்டத்திலும் நீதிமன்றங்களிலும் பல்லாயிரக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதியே அல்ல என்று சொல்வார்கள். மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும்கூட விரைந்து விசாரித்து நீதிவழங்காமலிருப்பது கண்டனத்துக்குரியது.
இத்தகைய வழக்குகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏதுவாக நாடெங்கும் மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவிலாவது விரைவு நீதிமன்றங்களை மைய அரசு தனது நிதிப் பொறுப்பில் உடனடியாக அமைத்திட வேண்டும். காவல்துறையிலும் நீதித்துறையிலும் பெண்களுக்கு உரிய பங்கேற்பை உறுதி செய்திட மைய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். பெண்கள் மீதான குற்றங்கள் பொதுவாகவே அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, தலித் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன. இவற்றைக் கவனத்தில்கொண்டு, பெண்கள் மற்றும் தலித்துகள் தொடர்பான சட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த மைய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள்தான் இறந்துபோன அந்த இளம்பெண்ணுக்கு அரசு செலுத்துகிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக