சாதி, மத எல்லைகளைக் கடந்து அறவழியில் மானுடத்தைப் போற்ற அனைவரும் உறுதியேற்போம்


திசம்பர் 25 – மனிதநேயப் பெருநாள்
சாதி, மத எல்லைகளைக் கடந்து 
அறவழியில் மானுடத்தைப் போற்ற அனைவரும் உறுதியேற்போம்
தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

போட்டி – பொறாமை, வெற்றி – தோல்வி, இன்பம் – துன்பம் போன்ற உணர்ச்சிகளின் குவியலில் சிக்கித் தவிக்கும் மானுடத்தை அன்பு, அறம், அமைதி போன்ற நன்னெறியில் வழிநடத்தி மேம்படுத்துவதற்காக இம்மண்ணுலகில் அவ்வப்போது மாமனிதர்கள், மகான்கள் தோன்றுவதுண்டு. கவுதமபுத்தர், மகாவீரர் போன்ற மகான்களின் வரிசையில் இயேசு பெருமான் அவர்களும், குலம், சாதி, மதம், இனம், தேசம் போன்ற எல்லைகளைக் கடந்து உலகம் தழுவிய அளவில் மனிதநேயத்தைத் தழைக்கச் செய்து மக்களை நெறிப்படுத்தி வழிநடத்தினார்.  ஏழை எளியோரை, உழைக்கும் மக்களை ஈவிரக்கமின்றி அடக்கி, ஒடுக்கி, சுரண்டி வாழும் ஆதிக்கச் சக்திகளை நன்னெறிப்படுத்துவதன் மூலமே இம்மண்ணில் மானுட அமைதியை நிலைநாட்ட முடியும் என்னும் நம்பிக்கையில் அறநெறிகளைப் போதித்தார்.

தன் குடும்பம், தன் குலம், தன் சாதி, தன் மதம், தன் இனம் என தன்னல வெறிகொண்டு மானுடத்தைச் சிதைக்காமல் ஒருவரையொருவர் நேசிக்கும் உயர்ந்த பண்பை, மனிதநேயத்தை வளர்த்துக்கொள்வதன் மூலமே சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை, தம் வாழ்வின் செய்தியாக உலகுக்குக் கூறியவர்தான் இயேசு பெருமான் அவர்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ஆட்சிக் காலத்தில் உழைக்கும் எளிய மக்களுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை எதிர்த்து சனநாயகக் குரல் எழுப்பியவர்தான் இயேசு பெருமான்.  எளியோருக்காக வாதாடுவதும் போராடுவதும் வாழ்வதும்தான் ஒரு மனிதனின் சிறப்புமிக்க வாழ்க்கையாகும். எளியோரை வதைப்பதும் சிதைப்பதும் மானுட நாகரிகத்தின் இழிவாகும்.  எளியோர் வாழ, சனநாயகம் தழைக்க, சமத்துவம் மலர மகத்தான வாழ்வியல் நெறிகளை வழங்கிய மகான் இயேசுபெருமானைப் போற்றி வணங்கும் பெருநாளே கிறிஸ்துமஸ் திருநாளாக உலகமெங்கும் கிறித்தவப் பெருங்குடி மக்களால் கொண்டாடப்படுகிறது.

கிறித்தவ மதம் சாராத மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் இயேசு பெருமானின் பிறந்த நாளான திசம்பர் 25ஆம் நாளை மனிதநேயப் பெருநாளாகக் கொண்டாடுவதைக் காண முடிகிறது.  அத்தகைய நன்னாளில் சாதி, மத எல்லைகளைக் கடந்து அன்பு, கருணை போன்ற அறவழியில் மானுடத்தைப் போற்ற அனைவரும் உறுதியேற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அனைத்துத் தரப்பினருக்கும் அறைகூவல் விடுத்து எமது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக