அண்ணாமலை பல்கலை: அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் - திருமா பேச்சு



அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கண்டித்து இன்று அனைத்துக் கட்சி உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியினால் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வதாக நிர்வாகம் அறிவித்தது. இதை அடுத்து அதனைக் கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக சிதம்பரம் காந்தி சிலை அருகே அனைத்துக் கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரதம் துவங்கியது.
இந்த கூட்டத்தில்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழகம் முழுவதிலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை பற்றி பேசும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அதனை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். எனவே பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நிலையினை திரும்ப பெற வேண்டும். ஆள்குறைப்பு, ஊதியகுறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் பல்கலைக்கழகம் முடங்கி போய் கிடக்கிறது. தமிழக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது தான் ஏன் என்று தெரியவில்லை.
பல்கலைக்கழகம் நூறு சதவீதம் தனியாருடையது அல்ல. அரசு நிதி உதவியில் இயங்கும் பல்கலைக்கழகமாகும். எனவே அரசு இப்பிரச்சினையில் தலையிட நூறு சதவீத பொறுப்பு உண்டு. காலவரையற்ற விடுமுறையினால் மாணவர்கள் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் நலன் கருதி தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நன்கொடை என்கிற பெயரால் பல்கலைக்கழகம் வணிக நிறுவனமாக மாறி உள்ளதை, கல்வி சந்தை என்றும் கூறலாம். மேலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ்., பி.இ., பி.எஸ்.சி. போன்ற படிப்புகளில் சேர தரகர்கள் மூலம் பணம் பெற்று விற்பனை செய்யப்படுகிறது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அடங்கும். இதனை தவிர தமிழகத்தில் பல்கலைக்கழகத்திற்கென்று பொதுவான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் இவ்வாறு பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக