தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு 419 டி.எம்.சி.தண்ணீர் தரவேண்டும்

நாகை மாவட்டம், மயிலாடு துறையில் நடைபெற்ற காவிரி நதி நீர் உரிமை ஊர்திப் பயணத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது:-
கர்நாடக அரசு தமிழகத்திற்கு எந்த அளவிற்கு ஏமாற்றி தண்ணீர் தர மறுத்துவருவதை மக்களாகிய நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன். காவிரி இன்று வறண்டு கிடக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியம்மான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வானம் பார்த்த பூமியாகிவிட்டது.
குறுவை சாகுபடியும் இல்லை. சம்பா சாகுபடியும் காய்கிறது. அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில் நாளொன்றுக்கு தமிழகத்துக்கு 2 டி..எம்.சி. தண்ணீர் திறந்து விடவேண்டுமென தமிழக முதல்வர் கேட்டார். அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை தினம் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் கர்நாடக அரசு திறந்துவிடவேண்டுமென பிரதமர் ஆணையிட்டார்.
அதையும் ஏற்கவில்லை கர்நாடக அரசு. அதனை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தை அனுகியது. பிரதமர் ஆணையிட்டதைப்போலவே உச்சநீதி மன்றமும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உத்தரவிட்டது.
பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல. அது தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. என சொல்லப்பட்டாலும் உண்மையில் நமக்கு கர்நாடக அரசு தரவேண்டியது 192 டி.எம்.சி. மட்டுமே மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் ஒரு பிரச்சினை என்றால் அனைத்துகட்சிகளும் ஒன்று சேர்ந்துவிடுகிறது. ஆனால் தமிழகத்தில்தான் இதுபோன்ற ஒற்றுமை இல்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் இன்னும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை. காவிரி நீரில் தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே தமிழகத்தின் உணவு உற்பத்தியை பாதுகாக்க முடியும் . காவிரி தமிழகத்தின் உயிர் பிரச்சினை.
இவ்வாறு தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.
புகைப்படங்கள் : தாமரை
0 comments:
கருத்துரையிடுக