காவிரி நீர் உரிமையை மீட்க தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! முழு அடைப்புப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்க வேண்டும்! தொல். திருமாவளவன் அறிவிப்பு


காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரும் இந்தியத் தலைமை அமைச்சருமான மாண்புமிகு மன்மோகன்சிங் அவர்கள் தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் வழங்க வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதி மன்றத்தில் மறு ஆய்வுக்கு மனு செய்தது. அவ்வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் போக்கைக் கண்டித்துள்ளது.  அத்துடன் கர்நாடக அரசின் கோரிக்கையை முற்றிலுமாக மறுதலித்துள்ளது.  ஆனாலும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தையும் காவிரி நதிநீர் ஆணையத்தையும் அவமதிக்கும் வகையில் கடந்த ஒரு சில நாட்களாக வழங்கி வந்த குறைந்த அளவு தண்ணீரையும் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.  

அதாவது கடந்த செப்டம்பர் 20ந்தேதி முதல் அக்டோபர் 15ந்தேதி வரையில் சம்பா நெல் சாகுபடியைக் காப்பாற்றும் வகையில் காவிரி நீரை தமிழகத்திற்கெனத் திறந்துவிட தலைமை அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆணையிட்டார்.  அதனை எதிர்த்துக் கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் போராட்டங்கள் என்கிற பெயரில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களை கன்னடர்கள் தீவிரமாக நடத்திவரும் சூழலில் தமிழகம் எத்தகைய சலசலப்புமின்றி அமைதியாய் இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. தமிழக முதலமைச்சர் தற்போது கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தகுந்ததுதான் எனினும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கத் தயங்குவது ஏன் என்றும் விளங்கவில்லை.  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடந்த சில வாரங்களாகவே காவிரிச் சிக்கலில் களமிறங்காமல் அமைதி காப்பது ஏன் என்றும் புரியவில்லை.  

தற்போதுள்ள சூழலில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து சாதி, மத வரம்புகளைத் தாண்டி தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் அணிதிரண்டு போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.  அத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிற அரசியல் கட்சிகளையும் விவசாயச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து காவிரி நீர் உரிமையை மீட்பதற்கு முழு அடைப்புப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

0 comments:

கருத்துரையிடுக