இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்!
காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் தமிழர் விரோதப் போக்குக்குக் கண்டனம்!
இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதித்தால் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்த்துப் போராடும்!
தொல்.திருமாவளவன் எச்சரிக்கை!
மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா 21-9-2012 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு சிங்கள இனவெறியன் இராஜபக்சே வருகிறார். பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏராளமான பௌத்தர்களைக் கொண்ட வாக்கு வங்கியைக் குறியாக வைத்து அதனடிப்படையில் இராஜபக்சேவை அவ்விழாவுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றியுள்ள ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமில்லாத இராஜபக்சேவை காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பாரதிய ஜனதாவும் வரிந்துகட்டிக்கொண்டு வரவேற்பதும் ஊக்கப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அண்மையில் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கைக்குச் சென்றிருந்த வேளையில் இராஜபக்சேவை தனியே சந்தித்து நீண்டநேரம் உரையாடியிருக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ். அச்சந்திப்பின்போதே இவ்விழாவிற்கு அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கிற மனிதநேயப் பார்வை ஆளும் கட்சிக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சிக்கும் இல்லை என்பதைத்தான் நம்மால் அறிய முடிகிறது.
இந்தியாவின் எந்த மூலையிலும் சிங்கள இனவெறிக் காடையர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கக்கூடாது என்று தமிழகத்திலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினருமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையிலும், இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு என்றும் அதனால் சிங்களவருக்கு பயிற்சி அளிப்போம் என்றும் மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜ் என்பவர் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். அதைப் போலவே இன்று சுஷ்மா ஸ்வராஜ் அவர்களும் தமிழர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் வீம்புக்கு இராஜபக்சேவை அழைத்து வருகிறார். அதற்கு இந்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இக்கட்சிகளின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், இராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் இராஜபக்சேவை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறப்போராட்டத்தில் ஈடுபடும். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டனக் குரல் எழுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல். திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக