இடஓதுக்கீட்டைப் பாதுகாக்க அனைவருடனும் அணிசேர விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இருக்கிறது – எழுச்சித் தமிழர் அழைப்பு

அரசு ஊழியர்கள் பத்து சவரன் தங்கக் காசினை வழங்கினர்.
-
அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு 02.09.2012 ஞாயிற்றுக் கிழமை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கதில் நடத்திய மாநில மாநாடு தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற பொதுத் தலைப்பின் கீழ் நடைபெற்றது.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திரு.சகாதேவன் அவர்கள் தலைமைத் தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர்.உதித் ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிறித்துதாஸ் காந்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
-
அவர்பேசும் போது.. விடுதலைச் சிறுத்தைகள் தலித் அரசியலை பொது நீரோட்டத்தில் கொண்டுவர கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறது. வெறும் ஊடகங்களை நம்பியிருக்கும் அரசு ஊழியர்கள் சிறுத்தைகள் தலித்துகளின் போராட்டத்தை கண்டுக் கொள்வதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள், நாங்கள் நடத்தும் போராட்டங்களை எந்த ஊடகமும் வெளியிடாதபோது உங்களுக்கு நாங்கள் போராடாதது போன்றத் தோற்றத்தை தருகிறது. இந்த ஊடக இருட்டடிப்பையும் மீறி நாங்கள் களத்தில்நின்றுக் கொண்டிருக்கிறோம், அதை அரசு ஊழியர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
-
இடஒதுக்கீடு என்பது ஒரு ஏமாற்று மோசடியாக மாறி வருகிறது, வெறும் கண் துடைப்பாக மட்டுமே இருக்கிறது, பாதுகாப்பான எந்த வழியையும் அரசு இதுவரை கண்டுபிடிக்காமல் பதவி உயர்வில் மட்டும் இடஒதுகீட்டை கொண்டு வர மத்திய அரசு முயல்வது வெறும் கண் துடைப்புதான் என்று கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் முன்னிலையில் சொன்னேன் இதை எந்த ஊடகங்கள் பதிவு செய்தது. இருந்தாலும் எங்களின் கடைமையை நாங்கள் செய்து வருகிறோம். அம்பேத்கர் சொன்னது போல சிறுத்தைகள் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்துப் போகிறவர்கள் அல்ல எங்கிருந்தாலும் தமது இருப்பை நிலைநாட்டுபவர்கள். எனினும் பதவி உயர்வில் மட்டுமல்ல அனைத்து அதிகாரம் வாய்ந்தப் பதவிகளிலும், தனியார் துறையிலும் தலித்துகளுக்கு இடஒதுகீடு வழங்கப்பட வேண்டும் அதற்காக ஒத்தக் கருத்துடைய யாவருடனும் இணைந்துப் பணியாற்ற விடுதலைச் சிறுத்தைகள் தயாராக இருக்கிறது என்று பேசினார்,
-
முன்னதாக அரசு ஊழியர்கள் விடுதலைச் சிறுத்தைகள் தொடங்க இருக்கும் ஊடகத்திற்காக பத்து சவரன் தங்கக் காசினை எழுச்சித் தமிழரிடம் வழங்கினர்.
-
மாநாட்டில் ஏராளமான அரசு ஊழியர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் கலந்துக் கொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக