ராஜபக்சே வருகையை கண்டித்து இலங்கை தூதரகம் முற்றுகை : திருமாவளவன் கைது


இலங்கை அதிபர் ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரே உள்ள இலங்கை தூதரகம் முன்பு 21-ந்தேதி (இன்று) முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்து இருந்தது. 







இதையடுத்து, இலங்கை தூதரகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்டெர்லிங் ரோடு சந்திப்பு முதல் இலயோலா கல்லூரி வரையிலான சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. 

போலீசார் அரண் போல் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 11 மணி அளவில் தலைவர்  திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தையினர் அப்பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். 

அதையும் மீறி விடுதலை சிறுத்தைகள் மெல்லமெல்ல முன்னேறி சென்று ராஜபக்சேவின் உருவ பொம்மையை நடுரோட்டில் வைத்து எரித்தனர். நவீன தீயணைப்பு கருவியை பயன்படுத்தி போலீசார் தீயை அணைத்தனர். 

அப்போது, நிறைய புகை கிளம்பியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிவிட்டார்களோ? என்ற பரபரப்பு சிறிது நேரம் நிலவியது. இந்த பரபரப்புக்கு இடையே, சிறிது சிறிதாக முன்னேறி, நடுப்பகுதிக்கு வந்து விட்டனர். அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்தனர். 

இதையடுத்து, திருமாவளவனும், கட்சி தொண்டர்களும் அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிராகவும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர். போராட்டத்துக்கு இடையே தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி வருமாறு:- 

10 கோடி தமிழ் இனத்தின் உணர்வுகளை மதிக்காமல் இந்திய அரசு ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது. இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வரும் நவம்பர் மாதம், ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் பற்றி, தன்னிச்சையாக விசாரணை நடத்த உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. அதை தடுக்கவும், இந்தியாவின் ஆதரவை திரட்டவும் தான், ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். 

அவர் இன்று ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்ததன் மூலம் இது ஊர்ஜிதமாகி உள்ளது. ராஜபக்சே உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதையடுத்து, தலைவர் திருமாவளவன் மற்றும் உடன் தலைவரின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா,வன்னிஅரசு, கருத்தியல் பரப்புச்செயலாளர் கௌதமசன்னா, சைதை எஸ்.எஸ்.பாலாஜி, வழக்கறிஞர் பார்வேந்தன், ம.கபிலன், இரா.செல்வம், எழில் இமயன், அறிவமுதன், ச.தமிழேந்தி, வீர.இராஜேந்திரன் புரசை அன்பு, உரிமைக்களம் தாமு மற்றும் 1000க்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டனர். 

0 comments:

கருத்துரையிடுக