காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் காவிரி நீர் உரிமைப் பயணம் தொல். திருமாவளவன் அறிவிப்பு
காவிரி நீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் காவிரி நீர் உரிமைப் பயணம்
தொல். திருமாவளவன் அறிவிப்பு
காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் கடந்த புதன்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர். இரு மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிந்த இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், செப்டம்பர் 20-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர் ஆணைய கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தார்.
விநாடிக்கு 9000 ஆயிரம் கன அடி நீர் என்பது போதுமானதல்ல; தமிழகத்திற்கு நியாயமான தீர்ப்பு அல்ல என்றாலும் இதனைக்கூட கர்நாடக அரசு ஏற்க மறுப்பது வேதனைக்குரியது. ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், சம்பா சாகுபடியையாவது செய்யலாம் என்று எதிர்பார்த்திருந்த தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வயிற்றிலடிப்பதுபோல் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துள்ளது.
காவிரி நீர்ச் சிக்கலில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல், காவிரி ஆணையத்தின் தீர்ப்பையும் மதிக்காமல், மறு ஆய்வு மனு என்றும், நிபுணர் குழுவை அனுப்ப வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்றும் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு வேலைகளை கர்நாடக அரசு செய்து வருகிறது.
கர்நாடக அரசின் இத்தகைய தமிழக விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்காட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் 'காவிரி நீர் உரிமைப் பயணம்' எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் ஊர்திப் பயணமாக நடைபெறுகிறது.
கர்நாடக அரசு காவிரியில் உடனடியாகத் தண்ணீர் திறந்து விடவேண்டும், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், அதுவரை இம்மாவட்டங்களில் மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக நீட்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இப்பயணம் அக்டோபர் 3ஆம் நாள் காலை 8 மணிக்கு சிதம்பரத்தில் தொடங்கி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரணியம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களின் வழியாகச் சென்று திருச்சியில் நிறைவடையும்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக