அமெரிக்க திரைப்படத்துக்கு எதிர்ப்பு: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்




நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சினிமா படத்தை கண்டித்து உலகம் முழுவதும் பல நாடுகளில் போராட்டம் நடந்து வருகிறது. 

லிபியாவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

முஸ்லிம் மனதை புண்படுத்திய சினிமா படத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்து இதை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. 

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திருமாவளவன், தடா அப்துல் ரகீம் ஆகியோர் தலைமையில் முஸ்லிம்கள் திரண்டனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சாலையின் ஒருபுறமாக அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யும்படி அறிவுறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.பாலாஜி, பார்வேந்தன், இளஞ்சேகுவேரா, கவுதமசென்னா, எழில் இனியன், கி.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தின்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

அமெரிக்க திரைப்படம் இஸ்லாம் மக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா, இஸ்லாம் நாடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணை வளங்கள் நிறைந்த முஸ்லிம் நாடுகள் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்போது நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளது. 

இஸ்லாமியர்கள் மனதை காயப்படுத்திய அந்த படத்தை தடை செய்யவேண்டும். படத்தை தயாரித்தற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு த.மு.மு.க. கட்சியினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளியில் இருந்த கேமரா, கண்ணாடி ஆகியவை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச் செயலாளர் காஜா மொய்தீன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகில் திரண்டனர். அவர்கள் ஒபாமா படத்தை செருப்பால் அடித்தனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர் ஒபாமாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் உருவ பொம்மையை பிடுங்க முயன்றனர். சுமார் 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு உருவ பொம்மையை போலீசார் கைப்பற்றி எரிக்க விடாமல் தடுத்தனர். பின்னர் உருவ பொம்மையை அருகில் உள்ள பூங்காவுக்கு எடுத்து சென்று போலீசாரே கிழித்து போட்டனர். அதன் பிறகு போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 comments:

கருத்துரையிடுக