செப்டம்பர் 20ஆம் நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தொல். திருமாவளவன் அறிவிப்பு
டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்குக் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு முதலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20ஆம் நாள் நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
வரலாறு காணாத வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையே பெரிதும் காரணம். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றும்விதமாக டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டொன்றுக்கு 6 மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அடுத்தத் தாக்குதலாக சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் யாவும் ஏழை எளிய மக்களை மேலும் வதைப்பதற்கே வழி வகுக்கும்.
சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை நிர்வாக ஆணையின் மூலம் மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது சட்டவிரோதமானதாகும். இதற்கான அதிகாரம் ரிசர்வ் வங்கிக்குத்தான் உள்ளது. ரிசர்வ் வங்கி அதற்கான சட்டத் திருத்தத்தைச் செய்து அந்தத் திருத்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி கொல்லைப் புற வழியாக அந்நிய நிறுவனங்களைக் கொண்டுவருகிற வேலையில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஏழை எளிய மக்களைப் பெருமளவில் பாதிப்புக்காளாக்கும் இந்த அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வருகிற செப்டம்பர் 20ஆம் நாள் பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் இந்த ஞாயமான போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. செப்டம்பர் 20ந்தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக