டீசல் விலை உயர்வு, கேஸ் கட்டுப்பாட்டை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திருமாவளவன்
திண்டுக்கல், செப். 16: மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வு, வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளை மீதான கட்டுப்பாட்டை முழு அளவில் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் தலைவர் கூறியதாவது:
மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை அதிருப்தியைத் தருவதாக உள்ளது. ஏழைகளை இது மிகவும் பாதித்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான கட்டுப்பாடு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே இதை 100 சதவீத அளவில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட வேண்டும்.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது தோழமைக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது கண்டனத்திற்கு உரியது. அனுஉலை கட்டமைப்பில் அந்நிய முதலீடு போல சில்லரை வர்த்தகத்திலும் அந்நிய முதலீடு என்பது ஏகாதிபத்திய நாடுகள் நம்மீதான மேலாதிக்கத்தை தலைவிரித்தாட செய்யும். எனவே இந்த முடிவையும் திரும்பப் பெற வேண்டும். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுக்கு தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
உத்தரபிரதேசத்திற்கு ராஜபட்ச வரவேண்டும் என பாஜக அழைப்பு விடுத்ததைக் கண்டிக்கிறோம். ராஜபட்ச வருகைக்கு இந்திய அரசு அனுமதி அளிப்பதை மத்திய அரசும் கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது. இந்தியா எங்கும் அணுஉலை கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு.
தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்புத் தெரிவிப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும். எனவே அனைத்து கட்சியினரும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
0 comments:
கருத்துரையிடுக