எழுச்சித்தமிழரின் பக்ரித் நல்வாழ்த்துக்கள்...



அறமும் சமூக நல்லிணக்கமும் மேலோங்க யாவரும் உறுதி ஏற்போம்! 

பக்ரீத் பண்டிகை எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப்  பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

இறைவனின் தூதர்களில் ஒருவரான இப்றாகிம் தன்னுடைய மகனைப் பலியிடுவதற்கு முயன்றபோது இறைவனால் தடுக்கப்பட்டு, ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டார் எனப்படும் இசுலாமியர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பக்ரீத் எனும் இந்த ஈகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி புனித மெக்காவிற்கு ஹஜ் எனும் புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.  உலகெங்கும் பரவி வாழும் இசுலாமியர்களில், வாய்ப்புள்ளவர்கள் மெக்காவிற்குப் பயணம் செய்து தமது ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதே வேளையில் அத்தகைய பயணத்தை மேற்கொள்ள முடியாத இசுலாமிய மக்கள், இறைத்தூதர் இப்றாகிம் அவர்களின் வழியைப் பின்பற்றி இறைவனுக்காக ஆடுகளைப் பலியிடும் கடமையை நிறைவேற்றுகின்றனர். 

தன் மகனையே இறைவனுக்காகத் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்றாகிம் அவர்களின் தியாகத்தைப் போற்றுவதே இப்பண்டிகையின் அடிப்படை நோக்கமாகும்.  இல்லாத ஏழை எளியோருக்கு ஈகம் செய்வதும், இறைவனுக்காக ஈகம் செய்வதும் மனிதனின் வாழ்வியல் கடமைகள் என்பதாக இசுலாம் உணர்த்துகிறது. அந்த வகையில் ஈகத்தைப் போற்றும் இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் இத்திருநாளில் அமைதியும் அறமும் சமூக நல்லிணக்கமும் மேலோங்குவதற்கு யாவரும் உறுதி ஏற்போம்..


0 comments:

கருத்துரையிடுக