சிறுத்தைகள் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டம்
ராஜீவ் கொலையாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி, கோயம்பேடு பஸ் நிலையம் அருகில், தமிழ் அமைப்புகள் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுதில்லி சென்றிருந்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இப்போராட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக மாலை 5 மணியளவில் சென்னை திரும்பினார். மாலை ஆறு மணியளவில் தொடர் பட்டினி போராட்ட அரங்கத்திற்கு வந்து உண்ணாநிலை போராட்டத்தை பழச்சாறு கொடுத்து நிறைவு செய்துவைத்தார். தலைவரின் உரையை கேட்க ஐநூறுக்கும் மேற்பட்டோர் அங்கே மிகுந்த ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.
தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கருத்துரையாற்றிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. திட்டமிட்டு மின்தடை செய்யப்பட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் சுமார் முப்பது நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு பகுதியில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. அரங்கத்தினுள் இருந்த தொல்.திருமாவளவன் அவர்கள் சாலை மறியல் நடைபெறுவதை அறிந்து வெளியே வந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளை அரங்கத்தினுள் அழைத்து சென்றார். சாலை மறியல் போராட்டத்திற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தொடர்ந்து கருத்துரையாற்றினார். இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துக் கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக