எழுவோம் தமிழர்களாய்! எழுப்புவோம் தமிழர்களை!!

ஆகத்து 17: ‘எழும் தமிழ் ஈழம்’ இன விடுதலை அரசியல் மாநாடு


எழுவோம் தமிழர்களாய்;

எழுப்புவோம் தமிழர்களை!


னி எழவே முடியாத வகையில் ஈழத் தமிழினத்தையும் ஈழ விடுதலைப் போராட்டத் தையும் நசுக்கிவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பலும் அவர்களுக்குத் துணைபோன துரோகக்கும்பலும் ஆனந்தக் கூத்தாடி ஆர்ப்பரிக்கின்றன. ஈழத்தமிழினத்தின் எதிரிகளும் துரோகிகளும் கைகோத்து கும்மாளம் அடிக்கும் இவ்வேளையில் தமிழ்ச்சமூகம் இனி என்ன செய்யப்போகிறது?

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்யப்போகிறோம்? வதை முகாம்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழர்களின் மீட்சிக்கு என்னதான் வழி? காட்டுமிராண்டி இராசபக்சே, தமிழர்களை அவர்தம் வாழிடங்களுக்கு அனுப்பப் போவதாகவும் தெரியவில்லை. மூன்று இலட்சத்திற்கும் மேலான தமிழர்களை விலங்கினத்தையும்விட கேவலமான முறையில் வதை முகாம்களில் அடைத்துவைத்து விவரிக்க முடியாத அளவில் கொடுமைகள் செய்துவரும் நிலையில் அவர்களை மீட்பதற்கு என்ன செய்யப் போகிறோம்?

உலகின் எந்த மூலையிலும் நடக்காத கொடுமைகள் யாவும் ஈழமண்ணில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளும் ஈவிரக்கமற்ற இத்தகைய கொடுமைகளுக்கு உறுதுணையாக நின்று ஊக்கமளித்து வருகின்றன. நீண்ட நெடிய சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளை எதிர்த்து வெடித்தெழுந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத நடவடிக்கையாக திரித்து அதற்கு எதிரான அரச பயங்கரவாதத்தை ஏவி வரலாற்றில் இதுவரை இல்லாத கொடூரங்களை யெல்லாம் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.

இந்நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டம், ஓர் இன விடுதலைப்போராட்டம் என்பதை எப்படி அனைத்துலக சமூகத்தின் முன்னால் நிறுவப்போகிறோம்? ஆளும் வர்க்கம் என்ற முறையில் சிங்கள இனவெறியர்கள் மிகமிக எளிதாக அனைத்துலக நாடுகளின் ஆட்சியாளர்களோடு தொடர்பு கொள்ளவும், அவர்தம் ஆதரவைப்பெறவும் முடிகிறது.ஆனால், தமிழர்களின் நிலை அவ்வாறு இல்லையே!நம்மைப்போல் விடுதலைக்காகப் போராடும் சனநாயக - முற்போக்கு சக்திகளின் ஆதரவைக்கூட நம்மால் அணிதிரட்ட இயலவில்லையே! அனைத்துலக அளவில் ஆளும்வர்க்கக் கும்பலின் ஆதரவைத்திரட்ட இயலாவிட்டாலும், ஆதரவையாவது நாம் வென்றெடுக்க வேண்டாமா? அதற்கு என்ன செய்யப் போகிறோம்?

விடுதலை வேட்கையில் வீரம்செறிந்த போர்க்குணமும், உலகையே வியக்கவைக்கும் பேராற்றல் கொண்ட மேதகு பிரபாகரன் தலைமையிலான நமது ஈழவிடுதலைப் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதை தமிழ்ச் சமூகத்திற்கு எப்படி உறுதிப்படுத்தப் போகிறோம்?

போர்க்களத்தில் பின்வாங்கலும் பின்னடைவும் தவிர்க்க இயலாதவை என்பதையும், மீண்டும் எழுச்சிப்பெறுவதும் வெற்றி பெறுவதும் விடுதலைப்போராளிகளின் இயல்பு என்பதையும் எப்போது உணரப்போகிறோம்?

ஆயுதம் ஏந்தும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் களத்தில் பகைவர்களை நேருக்கு நேர் சந்திக்க இயலாவிட்டாலும் ஈழவிடுதலைக்கான கருத்தியலை பாதுகாக்க வேண்டியதும் அதற்கான ஆதரவான சக்திகளை அணிதிரட்ட வேண்டியதும் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீகக் கடமை என்பதை எவ்வாறு உணரப்போகிறோம்? உணர்த்தப் போகிறோம்? தேர்தல் அரசியல் வரம்புகளைத் தாண்டி விடுதலைக்கான அரசியலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எவ்வாறு இணைந்து நிற்கப்போகிறோம்?

இப்படி எண்ணற்ற கேள்விகள் நம்முன் குவிந்து கிடக்கின்றன. நெஞ்சை அழுத்தி வருத்துகின்றன. இவற்றுக்கெல்லாம் விடைதேட வேண்டாமா? சோர்விலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் நாம் மீண்டெழ வேண்டாமா? அடுக்கடுக்கான போராட்டங்களால் தமிழக அரசியலை வெப்பப்படுத்திய விடுதலைச்சிறுத்தைகள் கொள்கை உறுதியோடு களமாடி வருவதைத் தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டாமா?

திரித்தும் மறைத்தும் விடுதலைச்சிறுத்தைகள் மீது பழி சுமத்தத்துடிக்கும் கையாளாகாதக் கும்பலையும் நாம் அடையாளம் காண வேண்டாமா? அம்பலப்படுத்த வேண்டாமா?

எந்த நிலையிலும், இறுதிவரையிலும் ஈழத்தமிழர் களுக்காக - ஈழவிடுதலைக்காக ஊக்கம் தளராமல் உறுதி குலையாமல் குரல் கொடுக்கும் போர் தொடுக்கும் புரட்சிகரச் சக்திகளே விடுதலைச்சிறுத்தைகள் என்பதை நிலைநாட்ட வேண்டாமா?

அதற்கான ஒரு கால அழைப்புதான் ஆகத்து 17, ‘தமிழர் எழுச்சி நாள் விழா’வாகும்! கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இவ்விழா தமிழினத்தின் எழுச்சிக்கானதாக அமையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டுக்கான விழாவும் அத்தகைய எழுச்சிமிக்கதாக, எழுச்சி ஊட்டுவதாக அமையவேண்டும்.

நம்முன்னால் குவிந்துகிடக்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை தேட வேண்டிய கடமை தமிழினத்திற்கு - விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு என்பதை உணர்த்தும் விழாவாகவும் இவ்விழா அமையவேண்டும். ‘எழும் தமிழ் ஈழம்’ என்னும் இனவிடுதலை அரசியல் மாநாடாக எதிர்வரும் ஆகத்து 17 அன்று ‘தமிழர் எழுச்சி நாள்’ ஒருங்கிணைக் கப்படுகிறது. எழுவோம் தமிழர்களாய்; எழுப்புவோம் தமிழர்களை!

எழும் தமிழினம் வெகுண்டு - பார் அதிர
எழும் தமிழீழம் மீண்டு!


இவண்
தொல்.திருமாவளவன்
(தமிழ்மண் ஜீலை 2009 தலையங்கத்தில்)

Image and video hosting by TinyPic

0 comments:

கருத்துரையிடுக