பல்கலைக்கழக பொதுச்சட்டத்துக்குள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தையும் உள்ளடக்கவேண்டும் - திருமா

தமிழக அரசு கொண்டுவர இருக்கும் பல்கலைக்கழக பொதுச்சட்டத்துக்குள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தையும் உள்ளடக்கவேண்டும். தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழக அரசு இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பல்கலைக்கழக பொதுச்சட்டத்துக்கான (common university act) மசோதா ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அந்த மசோதாவின் நகல் தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுச்சட்டம் ஒன்றை கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் அண்ணாமலை பல்கலைக்கழகம் மட்டும் விடுபட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி இப்போது கல்வியாளர்களிடையே எழுகின்றது.

2007ஆம் ஆண்டு இதேபோன்ற மசோதா ஒன்றை தமிழக அரசு கொண்டுவர முயற்சி மேற்கொண்ட போது அண்ணாமலை பல்கலைக்கழகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆனால் அம் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது உயர்கல்வித்துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழக அரசு பல்கலைக்கழக பொதுச்சட்டம் ஒன்றை கொண்டுவருவது மாணவர்களுக்கு நன்மை பயப்பதாகும். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலுகின்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த சட்டத்தால் கிடைக்கும் நன்மைகள் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

எனவே தமிழக அரசு கொண்டுவர இருக்கும் பல்கலைக்கழக பொதுச்சட்டத்துக்கான மசோதாவில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தையும் உள்ளடக்கி மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


இவண்,

(தொல். திருமாவளவன்)



-

0 comments:

கருத்துரையிடுக