'தமிழ் ஈழத்தை' மீட்பதற்குரிய வகையில் அரசியல் தீர்வு

'தமிழ் ஈழத்தை' மீட்பதற்குரிய வகையில் அரசியல் தீர்வு - திருமா அறிக்கை
தமிழர்களையும், தமிழீழ விடுதலைப்போராளிகளையும் ஈவிறக்கமற்ற முறையில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசைக் கண்டிக்கும் வகையிலும், களப்பலியான ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் எதிர்வரும் மே 28 2009ஆம் நாள் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அமைதிப்பேரணி!

விடுதலைச்சிறுத்தைகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் அறக்கட்டளை அரங்கில் இன்று 21.05.2009 காலை 11.30 மணி அளவில் தொடங்கியது. கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1) தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான நான்காவது போரில் வீரச்சாவடைந்த படைத்தளபதிகள் உள்ளிட்ட அனைத்து போராளிகளுக்கும், களப்பலியான பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கும் விடுத்தலைச் சிறுத்தைகளின் இந்த அவை தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

2) தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்றிவிட்டோம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கு அறிவிக்க வேண்டியும், அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகள் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகளை முறியடிக்க வேண்டியும் சிங்கள இனவெறி அரசு காட்டுமிராண்டித்தனமான தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் இறங்கி, ஈவிரக்கமற்ற முறையில் ஏறத்தாழ 50,000க்கும் மேலான தமிழர்களை இரண்டொரு நாளில் கொன்றுகுவித்துள்ளது. மனிதநேய மரபுகளையோ சர்வதேசப்போர் மரபுளையோ ஒரு பொருட்டாகவே மதிக்காமல், கொடூரமான இனப்படுகொலையை நடத்தியுள்ளது. மேலும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் அநேகமான முறையில், கேவலப்படுத்தி, கடும் வதைகளுக்கு ஆளாக்கி, கொத்துக்கொத்தாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. சிங்கள இனவெறி அரசின் இத்தகைய இழிவானப்போக்குகளை விடுதலைச்சிறுத்தைகள் மிகவன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் கொலைவெறியன் இராஜபக்சேவின் தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து ஈழத்தமிழர்களுக்கு நீதி கிட்டும் வகையில் மிகக்கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென அய். நா. பேரவையை விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அவை கேட்டுக் கொள்கிறது.

3)தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளையும் படுகொலை செய்துவிட்டதாக தம்பட்டமடித்துக்கொள்ளும் சிங்கள இனவெறி அரசு, எஞ்சியுள்ள அவர்தம் குடும்பத்தினரிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பலியானவர்களின் உடல்களை ஒப்படைத்து அவர்களை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவதற்கும், அவ்வாறு உறுதிபடுத்தப்பட்டால் அவர்களே இறுதி அடக்கம் செய்வதற்க்கும் சிங்கள அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக அவர்தம் உடல்களை சிங்கள இனவெறியர்களே புதைக்கவோ எரிக்கவோ கூடாது எனவும், உறவினர்களைக் கண்டுபிடிக்கும் வரையில் பலியனோர் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

4)விடுதலைப்புலிகளுகெதிரானப் போர் முடிந்துவிட்டதென சிங்கள இனவெறியர்கள் அறிவித்துள்ள நிலையில், உணவு, மருந்து, குடிநீர் முதலான அடிப்படத்தேவைகளை அங்கே ஆற்றோணாத்துயரத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கு வழங்கிட உரிய ஏற்படுகளை செஞ்சிலுவைச்சங்கம் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்திட வேண்டுமென இந்த அவை வேண்டுகோள் விடுக்கிறது. அத்துடன் ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கென உதவ முன்வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் எத்தகைய நிலையிலும் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் மூலமாக அத்தகைய உதவிகளைச் செய்யவே கூடாது என இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

5)கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற ஈழவிடுதலைப் போரில் சிங்கள இனவெறியர்களால் பாதிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு சிங்கள ஒற்றை ஆட்சியின் கீழ் சம உரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையானது உரிய நீதி வழங்கும் அணுகுமுறையாகாது. ஆகவே அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் ஒரே தேவையான 'தமிழ் ஈழத்தை' மீட்பதற்குரிய வகையில் அரசியல் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென இந்த அவை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும் இத்தகு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு மட்டுமே பேசுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாறாக புலிகள் அல்லாத, மக்களுக்கு எதிரான வேறெந்த தனி நபர்களோடும் அத்தகைய பேச்சுவார்த்தை முயற்ச்சிகளை மேற்கொள்ளாவேக் கூடாது எனவும் சர்வதேசச் சமூகத்தை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

6)தமிழீழ விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த பின்னரும், கடைசி நேரத்தில் சிங்கள அரசு அல்லாத இந்தியா போன்ற வேறு சில அரசுகளின் முன்னிலையில் எஞ்சியுள்ள தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆயுதங்களைக் கையளித்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த பின்னரும் சிங்கள இனவெறியர்களும் இந்தியா உள்ளட்ட சர்வதேசச்சமூகமும் மனிதாபிமான அடிப்படையில் கூட புலிகளின் கோரிக்கையை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுவும், பல்லாயிரக்கணக்கான மக்களையும் புலிகளின் தலைவர்களையும் சிங்கள இனவெறியர்கள் அழித்தொழிக்கும் வரையில் வேடிக்கைப் பார்த்ததுவும் வரலாற்றில் படிந்த துடைக்க முடியாத பெரும் களங்கமாகும். இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தின் மனித நேயமற்ற இந்த அணுகுமுறைகளை ஆழ்ந்த வேதனையுடன் இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது.

7)முல்லைத்தீவில் கடந்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும், தமிழீழ விடுதலைப்போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசைக் கண்டிக்கும் வகையிலும், களப்பலியான ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் எதிர்வரும் மே 28 2009ஆம் நாள் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அமைதிப்பேரணி நடத்துவதென இந்த அவை தீர்மானிக்கிறது.

8)நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அவை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறது

-- தொல். திருமாவளவன்


*******

2 comments:

ஐயா,
தங்கள் அரசியல் பார்வை அனுகுமுறை ஆகியவற்றை கண்ட வியந்தவர்களில் நானும் ஒருவன், ஈழம் தொடர்பாக திமுக அதிமுக தவிர்த்து தேர்தலுக்கு முன்னர் தாங்கள் நெடுமாறன் தலைமையில் இயங்கும் ஈழத்தமிழர் பாதுகாப்பு குழுவில் அங்கம் வகித்து பல போராட்டங்களை நடத்தினீர்கள், மீண்டும் தேர்தல் முடிந்த இந்த காலகட்டத்தில் மீண்டும் ஏன் தமிழ் உணர்வாளர்கள் ஓரணியில் இயங்கக் கூடாது, எவ்வாறாயினும் அதிமுகவோ திமுகவோ எதிலும் இணையப்போவதில்லை இங்கு தமிழர்கள் அரசியல்சார்பற்ற ஓரணியில் இருந்தால் நல்லதுதானே

22 மே, 2009 அன்று 6:23 PM comment-delete

Thank you Thiruma anna.

- Kiri

22 மே, 2009 அன்று 7:40 PM comment-delete

கருத்துரையிடுக