காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள்?: திருமா
வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு சுப்ரமணியசாமி தான் மூலக்காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் தலைமை நீதிபதி அனுமதியில்லாமல் ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர், காவலர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததன் மூலம் இது திட்டமிட்டத் தாக்குதல் என்று வெளிப்படையாக தெரிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கலவரம் உருவாவதற்கு சுப்ரமணியசாமிதான் காரணம் என்று குற்றம்சாற்றிய திருமாவளவன், வழக்கறிஞர்களை ஜாதியின் பெயரால் திட்டிய அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் முட்டை வீச்சு நடைபெற்றதற்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே எங்களை விரோதிகளாக சித்தரிக்க முயல்கிறார்கள் என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற தாக்குதல் தொடர்பாக இணை ஆணையர் ராமசுப்பிரமணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது போதாது என்றும் அவர் உட்பட இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
காவல்துறை உயர் நீதிமன்றத்தில் அத்துமீறி செயல்பட்டது,நேற்று அமைதியாக நடைபெற்ற தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் தடியடி நடத்தி பலரை காயப்படுத்தியும், 200க்கும் மேற்பட்டோரை கைது செய்ததேயாகும் என்றார்.
தமிழன், மக்கள், சி.சி.என், பி.பி.சி போன்ற தொலைக்காட்சிகளை இலங்கை அரசு தடை செய்து இருப்பதை கண்டித்துள்ள திருமாவளவன், இந்திய அரசு இலங்கையில் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளாததுடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ராஜபக்சேவின் ஊதுகுழலாக மாறி சிங்களர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றார்.
25 ஆண்டு கால போருக்கு ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் காரணம். அந்த ஒப்பந்தத்தை சிங்களர்களும் ஏற்கவில்லை. தமிழர்களும் ஏற்கவில்லை என்ற கூறிய திருமாவளவன், இப்போது நடைபெறுகிற போரை முன்னின்று நடத்துவது இந்திய அரசு தான் என்றும் அவர்களின் பச்சை துரோகத்தால் தான் தமிழர்கள் அங்கே செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் சொல்வதை நான் ஒரு பொருட்டாக கருதவில்லை என்றார் திருமாவளவன்.
0 comments:
கருத்துரையிடுக