திருமா கோரிக்கையை ஏற்றனர்- வைகோ,தா.பாண்டியன்,பழ.நெடுமாறன்,அய்யா.தமிழ்குடிதாங்கி ஓரணியில். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உதயம்
தமிழீழ அதரவு அரசியல் கட்சிகள் ஓரணியில் நின்று போராடவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எழுச்சி தமிழர் மேற்கொண்டார்,இது தொடர்பாக அய்யா.வீரமணி,அய்யா.தமிழ்குடிதாங்கி, சமத்துவ பெரியார் .கலைஞர் அவர்களை சந்தித்தனர் பின்னர் வைகோ அவர்களையும் ஒருகினைக்க முயன்ற பொது அரசியல் நிர்பந்தகளால் ஓரணியில் நிற்பதில் தடைகள் இருந்தன.
சாகும் வரை உண்ணாநோன்பு இருந்த எழுச்சி தமிழர் அந்த மேடையிலே வைகோ,தா.பாண்டியன் போன்றோர் அரசியல் வேற்றுமைகளை மறந்து ஈழ தமிழர் நலம் காக்க ஓரணியில் நிற்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார்
திருமாவின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் நேற்று அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் " தோற்றிவிக்கபட்டது
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சென்னையில் நாளை மௌன விரத கறுப்புக்கொடி போராட்டம் நடத்த "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்" முடிவு செய்துள்ளது.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்பினரும், மாணவர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவர் மருத்துவர் இராமதாஸ்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் தா.பாண்டியன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா
வழக்கறிஞர் கே.இராதாகிருஷ்ணன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், நிரந்தர அமைதி ஏற்படவும் தமிழகத்தில் என்னென்ன போராட்டங்களை நடத்துவது என்று இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.
அதன் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,
இன்று கூடி கலந்து ஆலோசித்ததில் "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம். தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளை வெளியிடுவதற்காக அந்த அமைப்பு இருக்கும். அந்த அமைப்பில் பங்கேற்பதற்காக மற்றவர்களையும் அழைக்க வேண்டும். இப்போது இங்கே வந்திருப்பவர்கள், "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்'' என்ற பெயரில் இப்போதிருந்து எங்களின் நடவடிக்கைகளை தொடங்குகிறோம். அதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க, பழ.நெடுமாறனை வேண்டி கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பழ.நெடுமாறன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
காந்திமறைந்த நாளில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பாக நாளை இங்கே இருக்கின்ற 5 பேரும், மற்றும் இங்கே வர முடியாமல் இருக்கக்கூடிய மற்ற தலைவர்கள், அமைப்புக்கள் அனைவரையும் அழைத்து, இலங்கையில் எமது சகோதர தமிழர்கள் அன்றாடம் படுகொலை செய்யப்படுகின்ற அந்த வேதனையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அதனை தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான தோழர்களும் கையில் கறுப்புக்கொடி ஏந்தி, அமைதியாக அங்கே மாலை 4:00 மணியில் இருந்து 6:00 மணி வரைக்கும் எமது மௌன விரதத்தை நடத்தவுள்ளோம்.
சென்னையில் ஒரு மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10:00 மணிக்கு ஒரு விரிவான கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை நாங்கள் வகுக்க இருக்கிறோம்.
அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து சமுதாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியிலாளர்கள் சங்கம், அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், திரைப்பட நடிகர், நடிகைகள், திரைப்பட இயக்குனர் சங்கம், பத்திரிகையாளர் சங்கம், விவசாய சங்கங்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒரு விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை அந்த கூட்டத்தில் நாங்கள் அறிவிக்க இருக்கிறோம்.
தொடர்ந்து, எமது இந்த வேதனையை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களை திரட்டி நாங்கள் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அது தொடர்பாக எல்லோரிடமும் பேசிவிட்டு அறிவிக்கப்படும் என்றார் பழ.நெடுமாறன்.
0 comments:
கருத்துரையிடுக