பிரபாகரன் போன்ற மாவீரன் இதுவரை பிறக்கவில்லை: திருமா பேச்சு


சிங்கள அரசு இலங்கை தமிழர்கள் மீது நடத்திவரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமைதாங்கி பேசினார். அப்போது அவர்,

’’பாகிஸ்தான், சீனா, இந்தியா, அமெரிக்கா உள்பட பல அரசுகள் சிங்களர்களுக்கு துணைபோகிறது. கழுத்தை வளைப்பதுபோல சுற்றிவளைத்து இருக்கும் நிலையில் கூட மண்டியிட்டு வாழ்வதைவிட போராடி சாவதே மேல் என்று விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகளை மறந்து இனமான அடிப்படையில் ஓர் அணியில் திரளுவதற்கு விடுதலை சிறுத்தைகள் துணிந்து முன்வந்திருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்களோடு சேர முடியாது என்று தயங்கவில்லை. அவர்களும் தயங்கமாட்டார்கள். நாங்களும் தயங்கமாட்டோம். இனத்தை காப்பதற்காக தேர்தல் அரசியலில் எத்தனை வீழ்ச்சி வந்தாலும் அதை சந்திக்க விடுதலை சிறுத்தைகள் தயார் என்ற அடிப்படையில்தான் இன்று களம் இறங்கியுள்ளது.


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழன் எந்த அளவுக்கு சொரனை கெட்டவன் என்று எண்ணி இருந்தால் விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கொண்டு சொல்லியிருக்க முடியும்.

விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழர்களும் சரண் அடைய வேண்டும் என்று சொல்லுவதாக பொருள். இவ்வாறு கூறுவது தமிழ் இனத்தையே கொச்சை படுத்தும் செயல்.

வரலாற்றுக்கு முன்பும் சரி, வரலாற்றுக்கு பின்பும் சரி பிரபாகரன் போல மாவீரன் உலகத்தில் இதுவரை பிறக்கவில்லை. அப்படிப்பட்ட விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரண் அடையமாட்டார்கள். மண்டியிட்டு வாழ வேண்டும் என்ற நிலையில் தமிழ் சமூகம் இல்லை. மாவீரன் பிரபாகரனை அரசியல்வாதிகளால் கேவல படுத்துவதை விடுதலை சிறுத்தைகளால் தாங்கிக்கொள்ளமுடியாது.

பதவிக்காக, ஓட்டுக்காக வாழ்கின்றவர்கள் விடுதலைப்புலிகள் இல்லை. உணவுக்கு வழி இல்லை என்றாலும், உறக்கத்திற்கு வழி இல்லை என்றாலும் கடைசி வரை நிமிர்ந்து நின்று போராடி வருகிற நெஞ்சுரம் படைத்த போராளிகளை பார்த்து சரண் அடையவேண்டும் என்று சொல்வது வெட்கக்கேடாக இருக்கிறது. மானக்கேடாக இருக்கிறது.

இந்திய அரசு இன்றைக்கு எத்தனை ஆயுதங்களை அனுப்பினாலும், எத்தனை வீரர்களை அனுப்பினாலும் அவர்களுக்கும் சேர்த்து சவுக்கடிகொடுத்து விடுதலைபுலிகள் வெற்றிகாண்பார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மரபுவழி ராணுவ போரை நடத்திக்கொண்டு இருக்கிற நிலையில் இருந்து மாறி கொரில்லா போரை கையில் எடுத்தால் அந்த போராட்டத்தை எந்த கொம்பனாலும் நசுக்கமுடியாது. ஆயிரம் ராஜபக்சே வந்தாலும், ஆயிரம் மன்மோகன் சிங் வந்தாலும் அந்த போராட்டத்தை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. தமிழக முதல்-அமைச்சர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு இலங்கை தமிழர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ சிக்கல்களை சந்தித்து தியாகங்கள் செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி. அடுத்தமாதம் 3-ந் தேதி கூட்ட இருக்கும் தி.மு.க. செயற்குழுவில் இந்திய அரசை பனியவைப்பதற்கான நல்ல முடிவை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகளும் காத்திருக்கிறோம்’’என்று பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக